×

149 ரன் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது நியூசிலாந்து: முதலிடத்துக்கு முன்னேற்றம்

சென்னை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது. கான்வே, வில் யங் இணைந்து நியூசிலாந்து இன்னிங்சை தொடங்கினர். கான்வே 20 ரன்னில் வெளியேற, யங் – ரச்சின் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தது. ஆப்கான் வீரர்கள் ஃபீல்டிங்கில் சொதப்பியதும் நியூசி. ஸ்கோர் உயர வழிவகுத்தது.

ரச்சின் 32 ரன் எடுத்து உமர்ஸாய் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். வில் யங் 54 ரன் (64 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), டேரில் மிட்செல் 1 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன் என்ற நிலையில் இருந்து 21.4 ஓவரில் 110/4 என நியூசி. திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் கேப்டன் டாம் லாதம் – கிளென் பிலிப்ஸ் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 144 ரன் சேர்த்தனர். பிலிப்ஸ் 71 ரன் (80 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), லாதம் 68 ரன் (74 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நவீன் உல் ஹக் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. மார்க் சாப்மேன் 25 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), சான்ட்னர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆப்கான் பந்துவீச்சில் நவீன் உல் ஹக், உமர்ஸாய் தலா 2, முஜீப், ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கில் சிக்கி சின்னாபின்னமான ஆப்கானிஸ்தான் 34.4 ஓவரிலேயே 139 ரன்னுக்கு சுருண்டு, 149 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ரகமத் ஷா 36, உமர்ஸாய் 27, இப்ராகிம் 14, குர்பாஸ் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இக்ரம் அலிகில் 19 ரன்னுடன் (21 பந்து, 3 பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் சான்ட்னர், பெர்குசன் தலா 3, போல்ட் 2, ஹென்றி, ரச்சின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதிரடியாக 71 ரன் விளாசிய கிளென் பிலிப்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து அணி, 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

The post 149 ரன் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது நியூசிலாந்து: முதலிடத்துக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Afghanistan ,Chennai ,ICC World Cup ODI ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தான் அணியிடம் மண்ணை கவ்வியது நியூசிலாந்து: 75 ரன்னில் ஆல் அவுட்