×

அரசியலுக்காக நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்: சனாதன வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு

சென்னை: அரசியலுக்காக நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி., ஆ.ராசா, மற்றும் இவர்கள் பேசும்போது உடன் இருந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று விளக்கம் கேட்கவும், அவர்களை பதவி நீக்கம் செய்யவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் தனித்தனியாக கோவாரண்டோ வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் பதில் மனு தாக்கல் செய்தார்.

பதில் மனுவில், இதில் வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வீடியோ பதிவை ஏற்க முடியாது. அது யாரோ ஒரு நபரால் எடிட் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து சான்றிதழ் எதுவும் பெறவில்லை. அதை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யவில்லை. மனுதாரர்கள், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ள இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள். இந்த வழக்கு தொடரப்பட்டதில் மறைமுகமாக பா.ஜ.வின் பங்கு உள்ளது தெளிவாகிறது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. மனுதாரர் அமைப்புக்கு ஆதரவான பாஜ பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்து வருகிறது. திமுகவுக்கும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கே இதற்கு காரணம். அரசியல், சித்தாந்தம் அல்லது இறையியல் தொடர்பான கேள்விகளுக்கு உயர் நீதிமன்றத்தால் விடை அளிக்க முடியாது. பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி புரட்சிக்காக முன்னணியில் நிற்பவர்கள். அரசியலமைப்பை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் ஏற்றத்தாழ்வு என்ற சமூக பேய்யை ஒழிக்க போராடினார்.

பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை வழங்க வேண்டும். அதுதான் திராவிட சித்தாந்தம். தமிழ்நாட்டில் பெண்களுக்கு கொடுத்துள்ள முன்னுரிமையை போல் வேறு எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை.தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் திராவிட கொள்கையை பின்பற்றுபவர்கள். திராவிட கொள்கையில் பிடிப்பு கொண்டதால்தான் தமிழ்நாட்டு மக்கள் எனக்கு ஓட்டு போட்டு, அமைச்சராக்கி உள்ளனர். திராவிடக் கொள்கையை மக்களிடம் நான் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள். மனுதாரர்கள் கூறுவதுபோல், யாருடைய மத, கோட்பாடு தொடர்பான நம்பிக்கையை அவமதிக்கவேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. அதேநேரம் மதத்தின் பெயரால் மக்கள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும். அது எனது கடமையாகும். இதுபோன்ற விஷயத்தில் கருத்து தெரிவிக்க அரசியல் அமைப்பில் உரிமை உள்ளது. அரசியமைப்பு எனக்கு தந்துள்ள அதிகாரத்தை கூட தெரிந்துகொள்ளாமல் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். சட்டத்துக்கு விரோதமாக ஒருவரை அமைச்சராக நியமிக்கும்போதுதான் இதுபோல கோவாரண்டோ வழக்கு தொடர முடியும். பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக கோவாரண்டோ வழக்கு தொடரமுடியாது. எனவே, உள்நோக்கத்துடன் அரசியல் ரீதியாக, விளம்பரத்திற்காக தொடரப்பட்ட இந்த வழக்கை அதிக பட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, வழக்கை நீதிபதி வரும் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post அரசியலுக்காக நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்: சனாதன வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,Chennai ,Minister ,Udhayanidhi Stalin ,Madras High Court ,Sanatana ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...