×

நிலக்கரி இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மோசடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமம் மீது விசாரணை: ராகுல் காந்தி பரபரப்பு அறிவிப்பு

புதுடெல்லி: நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் ரூ.12,000 கோடி முறைகேடு செய்துள்ளது தொடர்பாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தோனேசியாவில் இருந்து அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.12,000 கோடி முறைகேடு நடந்துள்ளது என லண்டனில் இருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவில் வாங்கிய நிலக்கரியின் விலை இந்தியா வந்ததும் இரட்டிப்பாகி விட்டது. நிலக்கரி இறக்குமதி விலை அதிகமானதால் மின்சார கட்டணம் அதிகரித்து நுகர்வோர்கள் அதிக மின் கட்டணம் செலுத்துகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஏழைகளுக்கு மின்சார மானியம் அளிக்கப்படுகிறது. ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அதானியின் நிலக்கரி இறக்குமதி மோசடி குறித்து விசாரணை நடத்தப்படும். ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என புரியவில்லை. விசாரணையைத் தொடங்கி அவரது நம்பகத்தன்மையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது பற்றி விசாரணை நடத்தினால்தான், அவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடியும். அதற்காகதான் விசாரணை நடத்த வலியுறுத்தி வருகிறேன்.

இந்த முறைகேடு எந்த அரசாங்கத்தையும் வீழ்த்தும். இது ஒரு மனிதனின் நேரடி திருட்டு. அவர் மீண்டும் மீண்டும் இந்திய பிரதமரால் பாதுகாக்கப்படுகிறார். கர்நாடகாவில் மின்சார மானியம் கொடுக்கிறோம், மத்தியப் பிரதேசத்தில் கொடுக்கப் போகிறோம். ஆனால் அதானி நிலக்கரி விலையை உயர்த்தி இந்திய மக்களிடமிருந்து நேரடியாகத் திருடுகிறார். இதைப்பற்றி பிரதமர் ஏன் கருத்து சொல்ல மறுக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. இது குறித்து எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை. இந்திய பிரதமரின் பாதுகாப்பு இல்லாமல் இது நடக்காது. அது சாத்தியமற்றது. ஆகவே, இந்த மாமனிதர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் கேள்வி. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதுபற்றி விசாரணை நடத்துவது பற்றி நாங்கள் ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடனான சந்திப்பின்போது அதானியை சந்தித்து பேசியது ஏன் என்று அவரிடம் கேட்டீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு,‘‘ சரத் பவார் இந்தியாவின் பிரதமர் இல்லை. அதானியை சரத் பவார் பாதுகாக்கவில்லை. மோடி தான் பாதுகாக்கிறார். எனவே,தான் பிரதமர் மோடியிடம் இந்த கேள்வியை கேட்கிறேன்.சரத் பவாரிடம் அல்ல. சரத் பவார் இந்தியாவின் பிரதமராக அமர்ந்திருந்தால், அவர் அதானியைப் பாதுகாத்திருந்தால், நான் சரத் பவாரிடம் அந்தக் கேள்வியைக் கேட்பேன்’’ என்று தெரிவித்தார்.

* உச்ச நீதிமன்ற விசாரணையில் ராகுலுக்கு நம்பிக்கையில்லை

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பா.ஜ செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,’ அதானி நிறுவனம் தொடர்பாக பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும் பிரச்னையில் ராகுல் கருத்து தெரிவித்து இருப்பது அவருக்கு அரசியலமைப்பு அல்லது உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. உலகில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம் காந்தி குடும்பம் தான். காங்கிரசின் டிஎன்ஏவில் ஊழல் உள்ளது’ என்றார்.

The post நிலக்கரி இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மோசடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமம் மீது விசாரணை: ராகுல் காந்தி பரபரப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Congress ,Rahul Gandhi ,New Delhi ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!