×

திருவல்லிக்கேணியில் தொடரும் சம்பவங்கள் பார்த்தசாரதி கோயில் அருகே மாடு முட்டி முதியவர் உயிர் ஊசல்: சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை காளை மாடு முட்டியதில் அவர் ஆபத்தான நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே நேற்று காலை 6 மணிக்கு முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் 3க்கும் மேற்பட்ட மாடுகள் நின்று கொண்டிருந்தது. அதில் காளை மாடு ஒன்று திடீரென நடந்து சென்ற முதியவரை வயிற்றில் முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் ரத்த காயத்தில் மயங்கி கிடந்தார்.

அப்போது சாலையில் வந்த வாகன ஓட்டிகள் மாடுகளை அங்கிருந்து துரத்த முயன்றனர். ஆனால் அவர்களையும் மாடுகள் முட்ட பாய்ந்ததால் அவர்கள் அங்கிருந்து விலகி சென்றனர். பின்னர் சாலையில் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் அசைவின்றி முதியவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். வயது மூப்பு காரணமாக அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஐஸ்ஹவுஸ் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்ற மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து முதியவரை முட்டிய காளை மாடு உள்ளிட்ட மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் காயமடைந்த முதியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சுந்தரம்(80) என்று தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மாடுகள் முட்டி படுகாயம் அடையும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் குற்றம்சாட்டியுள்ளனர். முதியவரை மாடு முட்டிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

* சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சிக்கு போலீஸ் கடிதம்
திருவல்லிக்கேணி பகுதியில் அதிகளவில் மாடுகள் சாலையில் சுற்றி வருகின்றனர். எனவே சாலையில் சுற்றும் மாடுகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தனி கவனம் ெசலுத்தி பிடிக்க வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பு காவல் துறை சார்பில் வழங்கப்படும் என்றும், மாட்டின் உரிமையாளர்கள் மீது சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு காவல்துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post திருவல்லிக்கேணியில் தொடரும் சம்பவங்கள் பார்த்தசாரதி கோயில் அருகே மாடு முட்டி முதியவர் உயிர் ஊசல்: சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Parthasarathi temple ,Chennai ,Tiruvallikeni Parthasarathy Temple ,Tiruvallikeni ,Parthasarathy Temple ,
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...