×

வாணியம்பாடியில் நடுரோட்டில் கனரக வாகனத்தை நிறுத்திய போதை டிரைவர்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் மதுபோதை காரணமாக சாலையின் குறுக்கே கனரக வாகனத்தை டிரைவர் நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போதை டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து தொழிற்சாலைக்கு தேவையான பல டன் எடையுள்ள இரும்பு உபகரணங்களை ஏற்றிக்கொண்டு நேற்று ஓசூர் நோக்கி கனரக வாகனம் சென்றது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் அருகே நேற்று மாலை சென்றபோது, திடீரென லாரி பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்காக நிறுத்தப்பட்டது.

இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வரிசைகட்டி நின்றது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வாகனம் நின்றதால் சந்தேகம் அடைந்த வாகன ஓட்டிகள், கனரக வாகனத்தின் அருகே சென்று டிரைவரிடம் தட்டிக்கேட்டனர். அப்போது, அவர் அதிகளவு மதுபோதையில் இருந்ததும், போதை காரணமாக வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தியதும் தெரியவந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவரை கண்டித்தனர். இதையடுத்து அந்த டிரைவர், வாகனத்தை எடுத்துச்சென்றார். இருப்பினும் அவர் போதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்படும் எனக்கருதிய வாகன ஓட்டிகள், வாணியம்பாடி டோல்கேட் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்குள்ளாக, போதையில் இருந்த அந்த டிரைவர் பர் கனரக வாகனத்தை வாணியம்பாடி டோல்கேட் நோக்கி ஓட்டிச்சென்றார். தகவல் அறிந்த அம்பலூர் போலீசார் அங்கு சென்று வாகனத்தை தடுத்து நிறுத்தி போதை டிரைவருக்கு அபராதம் விதித்தனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட கனரக நிறுவனத்துக்கும் தகவல் தெரிவித்தனர். பெங்களூர்-சென்னை நெடுஞ்சாலையில் மதுபோதை காரணமாக கனரக வாகனம் சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பொதுமக்கள் டிரைவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

The post வாணியம்பாடியில் நடுரோட்டில் கனரக வாகனத்தை நிறுத்திய போதை டிரைவர் appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...