×

ஐப்பசி முதல் முழுக்கு திருப்பராய்த்துறை காவிரியில் துலாஸ்நானம் தீர்த்தவாரி: மயிலாடுதுறை துலாகட்டத்திலும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்


திருச்சி: ஐப்பசி முதல் முழுக்கையொட்டி திருப்பராய்த்துறை காவிரியில் இன்று துலாஸ்நானம், தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர். மயிலாடுதுறை துலாகட்டத்திலும் திரளான பக்தர்கள் புனித நீராடினர். ஐப்பசி மாதத்தில் ஏழு புண்ணிய தீர்த்தங்களில் ஒன்றான காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு சமமென்று புராணங்களில் கூறப்படுகிறது. குடகிலிருந்து புறப்பட்டு பூம்புகாரில் கடலோடு கலக்கும் வரை இப்புண்ணிய நதிக்கரையில் 3 இடங்கள் மிக விஷேசமான தீர்த்த கட்டங்கள் ஆகும். இதில் முதலாவது திருப்பராய்த்துறை, 2வது கும்பகோணம், 3வது மயிலாடுதுறை. ஐப்பசி முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும், கடைசி நாளில் மயிலாடுதுறை துலாகட்டத்திலும் நீராடி அத்தலங்களில் உள்ள சிவமூர்த்திகளை வழிபடுவோருக்கு துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்புடைய துலா மாத பிறப்பையொட்டி திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேசுவரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து காலை புறப்பட்டு காவிரியை சென்றடைந்தார். அங்கு அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. அதன் பின்னர் பக்தர்களுக்கு தாருகாவனேசுவரர் காட்சியளித்தார். துலா ஸ்நானம் எனப்படும் புண்ணிய நீராடுதல் பெருவிழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளானோர் திருப்பராய்த்துறை காவிரி ஆற்றில் புனித நீராடினர். இதையொட்டி சத்திரம் பஸ்நிலையத்திலிருந்து திருப்பராய்த்துறைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி ரங்கம் அம்மா மண்டபம் உள்பட காவிரி கரைகளில் பொதுமக்கள் அதிகாலை நீராடி வருகின்றனர்.

இதேபோல், மயிலாடுதுறையில் மாயூரநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு சிவலிங்கத்தில் இறைவன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். அன்னையானவள் மயில் உருகொண்டு சிவலிங்கத்தைப் பூஜித்த சிறப்பு உடையது. பெரியகோயிலின் வடபுறத்தில் உள்ள துலாக்கட்டக் காவிரியில் கங்கை உட்பட அனைத்து புண்ணிய நதிகளும் இங்குவந்து பாவங்களை போக்கிக்கொண்டதால் இங்கே புனித நீராடுவது இந்தியாவில் உள்ள ஏழு புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைப்பதாக ஐதீகம். ஐப்பசி மாத பிறப்பையொட்டி இன்று காலை 5 மணி முதலே பக்தர்கள் காவிரி துலாக்கட்டத்தில் குவிந்தனர், ஆனால் கனுக்கால் அளவு மட்டுமே தண்ணீர் இருந்ததால் படித்துறை பள்ளத்தில் இறங்கி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த குழாயில் வந்த தண்ணீரில் புனித நீராடினர். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர்.

பலர் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பெரும்பாலான பக்தர்கள் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாமல் தவித்தனர். மதியம் 1.30 மணிக்கு மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதசுவாமி ஆலயத்திலிருந்து ஸ்ரீமயூரநாதர், அபயாம்பிகை, முருகன், விநாயகர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா சென்று துலாக்கட்ட காவிரியில் புனித நீராடிய நிகழ்ச்சி நடந்தது. நவம்பர் 16ம் தேதி அன்று முழுக்கும் நடைபெறும். கார்த்திகை முதல் நாளான நவம்பர் 17ம் தேதி தேதி அன்று முடவன் முழுக்குடன் துலா உற்வசம் முடிவுபெறுகிறது. இதேபோல் கும்பகோணம் உள்பட காவிரி காவிரி ஆறு ஓடும் பகுதிகளில் மக்கள் புனித நீராடினர்.

The post ஐப்பசி முதல் முழுக்கு திருப்பராய்த்துறை காவிரியில் துலாஸ்நானம் தீர்த்தவாரி: மயிலாடுதுறை துலாகட்டத்திலும் திரளான பக்தர்கள் புனித நீராடினர் appeared first on Dinakaran.

Tags : Tulāṇanam Tirthwari ,Mailadudura Dulaqata ,Trichy ,Tulasnanam ,Tirthwari ,Kaviri ,Caviri ,Tulasnanam Tirthwari ,Iapasi ,Dive ,Thirthwari ,Mayiladuthurai ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்