சென்னை: மதத்தின் பெயரால் சமூகத்தில் நிலவும் பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகள் மக்களை பிளவுப்படுத்துவது போன்ற தீமைகளை எடுத்துரைப்பது தமது கடமை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நாட்டின் பெரிய மாநிலங்களின் ஒன்றான தமிழ்நாட்டில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
தானும் அந்த சித்தாந்தத்தின் வாரிசுகளில் ஒருவன் என்பதால்தான், தமக்கு மக்கள் வாக்களித்து பதவியில் அமர்த்தி இருப்பதாக கூறியுள்ள உதயநிதி, திராவிட கொள்கைகளையும், சித்தாந்தத்தையும் பரப்ப வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தாம் இயங்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய கொள்கைகள், திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்தவை என்று சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், திராவிட தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அம்பேத்கர் போன்ற முன்னோடிகளின் கருத்தைதான் தானும் பேசுவதாக தெளிவுப்படுத்தியுள்ளார்.
தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பவர் மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் நம்பக்கூடிய சித்தாந்தத்தின் எதிரான கருத்துகளை திணிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மதத்தின் பெயரால் சமூகத்தில் நிலவும் பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்துவது போன்ற தீமைகளை எடுத்துரைப்பது தமது கடமை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் 25-வது பிரிவின்படி பகுத்தறிவாளராகவும், நாத்திகராகவும் இருப்பதற்கான உரிமை தமக்கு உண்டு என்றும் கூறியுள்ள அவர் இந்த பிரிவு ஆத்திகர்களுக்கான பரப்புரை உரிமையை மட்டுமே தருவதாக மனுதாரர் தவறாக புரிந்து கொண்டிருப்பதாக சாடியுள்ளார். 20-ம் நூற்றாண்டில் சமூக நீதியின் குரலை சத்தமாய் ஒலித்த மாநிலம் தமிழ்நாடு என்பதை நினைவு கூர்ந்துள்ள உதயநிதி பெரியார், அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்றோர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாதி மேலாதிக்கத்தை எதிர்த்து போராடி சமூக நீதி புரட்சியில் தங்களை பிணைத்துக் கொண்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீடுகள் அல்லது சமூகத்தில் பெண்களுக்கு சமமான இடத்தை பாரம்பரியமான இந்து நம்பிக்கை வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், பெண்களுக்கு மட்டுமல்ல 3-ம் பாலினத்தவருக்கும் சம உரிமையும், சமூகத்தில் அவர்களுக்கான நியாயமான இடத்தையும் கொடுத்து சுயமரியாதையை முன்னெடுப்பது திராவிட சித்தாந்தமே என்று உதயநிதி ஸ்டாலின் தமது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சி: சனாதன வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பிரமாண வாக்குமூலம் appeared first on Dinakaran.