×

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகுமரகுருபரரின் வரலாறு அறிய நமக்குத் துணைபுரிபவை மூன்று ஆதாரங்களாகும். ஒன்று குமரகுருபர சுவாமிகளின் வழி வழியாகத் தொடர்ந்து இன்றும் செம்மையாகப் பணிபுரிந்து வருகின்ற திருப்பனந்தாள் காசிமடத்தார் கொண்டுள்ள வரலாறு. இரண்டாவது சென்ற நூற்றாண்டின் பிற்பாதியில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதியுள்ள குமரகுருபர சுவாமிகள் சரித்திரம். மூன்றாவது தண்டபாணி சுவாமிகள் பாடிய குமரகுருபர சுவாமிகள் வரலாறு ஆகும்.

தென்பாண்டி நாட்டில் ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரின் ஒரு பகுதியாகத் திகழ்கின்ற கயிலாசபுரம் எனும் இடத்தில் சைவ வேளாளர் மரபில் தமிழ்ப் புலமை மிக்கவராய்த் திகழ்ந்த சண்முக சிகாமணி கவிராயருக்கும், சிவகாமசுந்தரி அம்மையார்க்கும், 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓர் ஆண் மகவு பிறந்தது. பிறந்த குழந்தைக்குக் குமரகுருபரன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர்.

ஐந்தாண்டுகள் நிரம்பியும் சிறுவன் குமரகுருபரன் பேசவே இல்லை. ஊமைக் குழந்தையுடன் திருச்செந்தூர் முருகன் சந்நதியை அடைந்து, தம் குறை சொல்லி அழுதனர் பெற்றோர். 45 நாட்கள் கடலாடி, மும்முறை முருகப் பெருமானைத் தொழுது வேண்டுவது, அது கடந்தும் பயனில்லை எனின் கடலில் மூழ்கி மாள்வது என விரதம் பூண்டு நாளும் திருச்செந்தூர் முருகப் பெருமானை வேண்டி வலம் வந்தனர்.

45-ஆம் நாள் கடையாமத்தில் முருகப் பெருமான் அர்ச்சகர் வடிவில் குழந்தை முன்தோன்றி, குமரகுருபரன் நாவிலே தம்முடைய வேலால் ஆறெழுத்து மந்திரத்தை எழுதி, ‘‘குழந்தாய் நமது விஸ்வரூப தரிசனம் காண வருவாயாக’’ என்றுகூறி மறைந்துவிட்டார். உடன் குழந்தையும் பெற்றோரை ‘‘அம்மா, அப்பா’’ என்றழைத்துப் பேசலாயிற்று.

அதிசயித்த சண்முக சிகாமணிக் கவிராயரும், சிவகாமி அம்மையும் குழந்தை குமரகுருபரனோடு செந்தில்வேலவனின் விஸ்வரூப தரிசனம் காணக் கோயிலுக்குச் சென்றனர். சந்நதி முன் நின்ற குமரகுருபரன் ‘‘பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும்’’ என்ற அடிகளைத் தொடக்கமாகவுள்ள ‘‘திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா’’வைப் பாடி முடித்தார். உலகமே அதிசயித்தது.

கயிலாசபுரம் திரும்பிய இக்குடும்பத்தார் நாளும் கயிலாசபுரம் திருக்கோயிலுக்குச் சென்று வந்தனர். அருள்பெற்ற ஞானக் குழந்தை அத்திருக்கோயில் இறைவன்மீது ‘‘கயிலைக் கலம்பகம்’’ பாடி மகிழ்ந்தது.ஞானம் பெற்ற குழந்தைக் கவிக்கு ஞானாசிரியன் ஒருவர் தேவை என உள்மனம் உணர்த்தியது. தமக்கு ஆசான் வேண்டிக் கயிலாசபுர இறைவனையும், திருச்செந்தூர் வேலவனையும் பிரார்த்தனை செய்தார். ஒருநாள் ‘‘குழந்தாய், நீ.. வடதிசை நோக்கி யாத்திரை செய்துகொண்டு பல தலங்களுக்கும் சென்று வழிபட்டு வருவாயாக, அவ்வாறு வழிபடுங்காலம் எந்தச் சந்நதியில் உன் வாக்குத் தடைபடுகிறதோ அந்த இடமே நீ ஞானம் பெறுவதற்கான இடம்’’ என்று அசரீரி ஒலி கேட்டார். இந்த நிலையில் அவருக்கு ‘‘குமாரகவி’’ என்ற ஒரு இளவலும் இருந்தான்.

தன் தம்பியுடன் மதுரை நோக்கிப் புறப்பட்டார். தம் ஊர் எல்லையில் பெற்றோரிடம் விடைபெற்றார். மதுரையை அடைந்து அங்கையற்கண்ணி அம்மையை வழிபட்டு ‘‘மதுரைக் கலம்பகம்’’ பாடி மகிழ்ந்து அருள்பெற்றார். பின்னர்த் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டார். ‘‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’’ எனும் அருந்தமிழ் நூலும் இயற்றினார். கி.பி. 1623 – 1659 வரை ஆட்சி புரிந்த திருமலை நாயக்கர் மதுரை அரசராகத் திகழ்ந்த காலம் அது.

மன்னனின் கனவில் மீனாட்சி தோன்றி இந்த நூலை அரங்கேற்றப் பணித்தாள். மன்னனும் தெய்வச் சந்நதியில் அமர்ந்து கொண்டு குமரகுருபரரின் நூலை அரங்கேற வழிவகுத்தான். நாளும் விரிவுரை நிகழ்ந்தது. திருமலை மன்னனின் மடியில் கோயில் பட்டரின் மகள் வடிவில் வந்து அமர்ந்து, அம்மையும் பதிகம் கேட்டாள். நிறைவு நாளில்தான் குழந்தையாக வந்தது மீனாட்சி அம்மையே என உலகம் கண்டு வியந்தது.

குமரகுருபரரின் தெய்வ ஆற்றல் உணர்ந்த திருமலை நாயக்கர், திருக்குறளின் பெருமையை அவர் வாயிலாக அறிந்து, எளிதில் பொருள் விளங்குமாறு தரும நீதியை உணர்த்த வேண்டினார். குமரகுருபரரும் அதற்கிசைந்து, ‘‘நீதிநெறி விளக்கம்’’ எனும் நீதிநூல் யாத்து அளித்தார்.மதுரையில் தங்கியிருந்தவருக்குத் திருவாரூர் பெருமானை வழிபடும் ஆவல் மிகுந்தது. தன் தம்பியை மதுரையிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லப் பணித்துவிட்டுத் தான் மட்டும் ஞானாசிரியன் தரிசனம் வேண்டித் திருவாரூர் புறப்பட்டார்.

திருவாரூரின் பல பெருமைகளுள் ஒன்று தருமபுர மடத்தின் முதல் குருவான குருஞானசம்பந்தருக்கு ஞான உபதேசம் செய்தவரான கமலை ஞானப் பிரகாசர் வாழ்ந்த பதி என்பதாகும். எப்படி குருஞானசம்பந்தருக்கு ஒரு கமலை ஞானப் பிரகாசர் கிடைத்தாரோ அப்படி தனக்கு ஒரு குரு கிடைக்கமாட்டாரா?’’ என்ற தவிப்பில் ஆரூர் இறைவனைப் பிரார்த்தித்தார். ‘‘திருவாரூர் நான்மணிமாலை’’ எனும் அற்புத நூலைப் பாடியருளினார். அங்கிருந்தபோது தருமபுர மடத்தின் பெருமையறிந்து உடன் அங்குப் புறப்பட்டார்.

குமரகுருபரர் தருமபுரம் சென்றபோது அங்குக் குருமகாசந்நிதானமாக விளங்கியவர் மாசிலாமணி தேசிகராவார். அப்பெரியாரைக் கண்ணுற்ற குமரகுருபரர் இவர்தான் தமக்கு ஞான ஆசான் என உணர்ந்தார். தருமபுர சந்நிதானத்தின் கேள்விகளுக்குப் பதில்கூறும்போது அசரீரி கூறிய வண்ணமே குமரகுருபரருக்குப் பேச்சு தடைப்பட்டது. இவரே என் ஆசான் என உறுதியாகப் பற்றிக் கொண்டார். மாசிலாமணி தேசிகரின் திருவாணையை சிரமேல் ஏற்றுத் தில்லைக்கும் பின்பு காசிக்கும் சென்று வந்தார்.

காசியில் தாராஷூகோ என்ற மொகலாய மன்னன் கூட்டியிருந்த சர்வசமய மாநாட்டில் கலந்து கொண்டார். இந்துஸ்தானி மொழியைக் கற்றுணர்ந்தார். சரளமாகப் பேசும் ஆற்றலும் பெற்றார். காசியிலேயே ‘‘சகலகலாவல்லிமாலை’’ பாடியருளினார். பல அற்புதங்கள் நிகழ்ந்தன. சிம்மத்தின் மீது அமர்ந்து அனைவரையும் வியப்புறச் செய்தார்.முகமதிய மன்னன் தாராஷூகோவின் உதவியால் காசி மடத்தை நிறுவினார். சைவம் காசியில் தழைக்கத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். குமாரசாமி மடம் என்ற பெயரில் அம்மடம் இன்றும் காசியில் அற்புதத் தொண்டாற்றுகின்றது. ஞான ஆசிரியன் அருள்பெற்றுக் காசியில் அற்புதங்கள் நிகழ்த்திய குமரகுருபரர் ‘‘குமரகுருபர சுவாமிகள்’’ என அழைக்கப்படலானார்.

காசியில் குமரகுருபர சுவாமிகள் தங்கியிருந்தபோது துளசிதாசரின் நட்பு ஏற்பட்டது. இந்துஸ்தானி மொழியில் அங்குள்ளவர்களுக்குக் கம்ப ராமாயணத்தை விரிவுரை செய்யலானார். இவரது பேச்சுக்களால் கவரப்பட்ட துளசிதாசர், தாம் இயற்றிய இந்திமொழி ராமாயணத்தில் கம்பனின் கைவண்ணங்களை அப்படியே படைத்தார். தமிழ் ராமாயணத்திற்குரிய பல சிறப்புகள் இந்தி மொழியில் பதிவு பெற்றது. வட இந்தியாவில் கம்பன் கவிதை நயம் தாக்கம் பெற்ற ஒரே ராமாயணம் துளசி ராமாயணமே. இதற்கு மூலபுருடராய்த் திகழ்ந்தவர் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளேயாவார்.

திருச்செந்தூர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறிவிளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, காசி தூண்டி விநாயகர் பதிகம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மீனாட்சியம்மை குறம், தில்லை சிவகாமியம்மை இரட்டை மணிமாலை ஆகிய நூல்களை குமரகுருபர சுவாமிகள் படைத்தருளியுள்ளார்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் appeared first on Dinakaran.

Tags : Sri Kumaragurupara ,Srikumaragurupara ,Kumaragurupara ,Swami ,
× RELATED பள்ளிகளில் ஆய்வக செயல்பாடுகளை...