×

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் RSS அமைப்பினர் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி மறுப்பு!

மதுரை: மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் RSS அமைப்பினர் பேரணி நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பிற தென்மாவட்டங்களில் பேரணி நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி நீதிபதி இளங்கோவன் உத்தரவு அளித்துள்ளார். விஜயதசமி அன்று பேரணி நடத்த RSS அமைப்பு அனுமதிகோரி இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை வரம்பிற்கு உட்பட்ட 20 இடங்களில் வருகின்ற 22ம் தேதி விஜயதசமி நாளன்று ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டும் விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் சார்பாக பேரணி நடத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அந்த அமைப்பின் சீருடையான காக்கி டவுசர், வெள்ளை சட்டை, தொப்பி, பெல்ட், பிளாக் ஷூ அணிந்து இசை வாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4 மணிக்கு பேரணி ஆரம்பித்து நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சுற்றி வந்து இறுதியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் கடந்த நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. தென் மாவட்டங்களில் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நேரத்தில்ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தால் காவல்துறை பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே தென் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி இளங்கோவன், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தின் போது ஒவ்வொரு மாவட்டங்களில் யார் பொறுப்பேற்பது? மேலும் ஊர்வலம் எங்கு ஆரம்பிக்கிறது? எங்கு நிறைவு செய்யப்படுகிறது? என்பது குறித்த முழு விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது எனவும், மற்ற மாவட்டங்களில் பேரணி நடத்திக் கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்தது. மேலும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அக்டோபர் 30-ம் தேதிக்கு பிறகு பேரணி நடத்த விரும்பினால் புதிதாக மனு கொடுத்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

 

 

The post தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் RSS அமைப்பினர் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : High Court ,Maduraikil ,RSS ,Tamil Nadu ,Madurai ,Ramanathapuram ,Sivaganga ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...