×

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!

வேலை, வேலை என்று இரவு, பகல் பாராமல் ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன சமூகத்தில் பெண்கள் தங்களை நிரூபிக்க ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் தங்களை ஒர்க்கஹாலிக் என்று சொல்வதைப் போல், பெண்களும் தங்களை ஒர்க்கஹாலிக் என்று சொல்லக் கூடிய காலக்கட்டத்தில்தான் நாம் இருக்கின்றோம்.
தனியார் வேலை, அரசு வேலை என்றில்லாமல், பலதுறைகளிலும் பெண்கள் வேலைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். இத்தகைய வளர்ச்சியைப் பார்க்கும் நம் சமூகத்துக்கு இது மிகப்பெரிய மாற்றமாக, பெண்களின் கனவுகளுக்கும், விருப்பத்திற்கும் அமையும் சூழலை சமூகம் ஏற்படுத்தி இருக்கிறது.

இத்துறைகளில் எல்லாம் பெண்கள் இருப்பார்களா என்று ஏங்கிய காலம் மலையேறி, இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை, வேலை என்று மட்டுமில்லாமல், ஒரு நிபுணராக தங்களை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு உழைக்க ஆரம்பித்து விட்டார்கள். கலைத்துறையில் பெண்களும் பல நாட்கள் தூங்காமல், ஒரு இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக வேலை பார்க்கின்றனர். சமூகப் போராளியாக இருக்கும் பெண்களுக்கு இடைவெளி நேரம் என்பதே கிடையாது. எந்த நேரத்திலும் அவர்கள் தங்களுடைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபராக இருக்கும் பொழுது, தூக்கம், சாப்பாடு என்று முகம் தெரியாத நபர்களுக்காக யார் கதவைத் தட்டினாலும், அவர்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் ஒர்க்ஹாலிக்காக இருந்தால், நம் ஒட்டு மொத்தச் சமூகத்துக்கும் மிகப்பெரிய பயம் ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக பெண் என்பவள் குடும்பத்தை நிர்வகிப்பதிலும், கணவனைக் காதலிப்பதிலும், அந்தக் காதலில் ஏற்படும் பிரிவை நினைத்து ஏங்குவதும், குழந்தைகளுக்காக அவர்களின் படிப்பு, கனவு எல்லாவற்றையும் தியாகம் செய்வதும் தான் நாம் பார்த்தும், பேசியும் பழக்கப்படுத்தி இருக்கிறோம். ஆனால் தற்போதைய சூழலில் பெண்கள் தங்களுடைய வேலையை மட்டுமே நினைத்துக் கொண்டும், அதைப்பற்றியே பேசுவதையும், அதில் ஏற்படும் வெற்றி, தோல்விகளையும், அதைச் சமூகம் அங்கீகரிப்பதையும் ஒரு சில வருடங்களாகத் தான் பார்க்கிறோம்.

உதாரணமாக சோசியல் மீடியா டிஜிட்டல் உலகில் ஒரு முக்கியமான டிஜிட்டல் தளத்தில் ஒரு பெண் தான் டைரக்டராக இருந்திருக்கிறார். ஷெரில் ஷென்ட்பேர்க் இவர் ஒரு மல்டி மில்லியனர், பேஸ் புக்கின் ஒரு டைரக்டர். இது போல் நம் இந்தியச் சமூகத்தில் பல பெண்கள் தொழிலதிபர்களாகவும், தலைவர்களாகவும், துறை நிபுணர்களாகவும் மாறி வருகிறார்கள். இவர்கள் எல்லாரும் தங்களுடைய திறமையைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

“பெண் குழந்தைகளை படித்தால் நன்றாக வருவாய்” என்று சொல்லும் சமூகம் தான், அவள் படித்து முடித்ததும் அவளுக்கான ஐடியாலஜி மற்றும் அவள் சுதந்திரமாக அவள் ஆசைப்பட்ட துறையில் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லும்போது எல்லாம் இந்தச் சமூகம் நிறைய வரைமுறைகளை கூற ஆரம்பித்து விடும். அந்த வரைமுறைகளை மீறவும் கூடாது, அதுவே பெண்ணுக்கு பாதுகாப்பு என்றும் கூறி விடும்.

சில வார்த்தைகள் ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த இடத்தில், பெண்களும் அந்த வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அப்படிப்பட்ட பெண்களின் சில அனுபவங்களை சொல்கிறேன்.ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் நல்ல பதவியில் அதிகாரியாக இருக்கும் பெண் சொன்னது, வாரத்தில் மூன்று மாநிலத்தில் பறந்து, பறந்து வேலை பார்க்கும் சூழலில் இருக்கிறேன். வாரம் முழுவதும் விமானப் பயணம் என்பதால், விமானச் சாப்பாடு வேண்டாம் என்றும், ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டும் வீட்டுச் சாப்பாடு சாப்பிட ஆசையாக இருக்கிறது என்றும் சொன்னார்.

பெண் இயக்குனர்கள் ஒரு நாளாவது போன் இல்லாமல், நன்றாக தூங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆசிரியர் ஒருவரோ தினமும் பள்ளி மாணவர்கள், வீட்டு வேலை என்று தொடர்ந்து பார்ப்பதால், ஒரு நாளாவது நன்றாக, யாரும் எழுப்பி விடாமல் தூங்க வேண்டும் என்றும் கூறினார். தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்காக தூக்கம், சாப்பாடு இழந்து, ஆண் மட்டுமே உழைக்கும் நபராக இருந்த காலம் மாறி, பெண்களும் அவர்களின் திறமையை நிரூபிக்க சில அடிப்படை வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் நியமித்து, கனவுகளை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டனர்.

இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய சில பெண்களின் பதவி, பொருளாதாரச் சுதந்திரம், அறிவின் வளர்ச்சி எல்லாம் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர்களுக்கான நேரம் அவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படும் அளவிற்கு, அவர்களின் இருப்பை அத்துறைக்கு மிக முக்கியமாக மாற்றி இருக்கிறார்கள். இந்தப் பெண் இருந்தால்தான் எங்கள் நிறுவனம் வெற்றிகரமாக இருக்கும் என்றும், இந்தப் பெண் இந்தப் படத்தை இயக்கினால்தான் ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்றும் சொல்வதைக் கேட்கும் பொழுதும் அத்தனை பெருமையாக இருக்கிறது.

ஆனால் அவர்களை மறந்து, அவர்களுக்கான உலகை மறந்து, அந்தத் துறை ரீதியாக மட்டுமே அவர்கள் உலகம் இயங்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். துறையில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு சிறு இடைவெளி இருந்தே ஆக வேண்டும் என்ற சூழலில் இத்தகைய பெண்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு தூக்கம் இல்லாமல், சரியான நேரத்திற்கு சாப்பிடாமல், உடல் எடை உயர்ந்தும் அல்லது மனதில் ஒரு தளர்வு ஏற்பட்டு, எதுவும் செய்யப் பிடிக்காமல் இருக்கும் நிலைமைக்கு பெண்கள் மனதளவில் சோர்வாக உணர்கின்றனர்.

இங்கு ஒரு பெண் கணவரைத் தவிர்த்து வேறு ஏதாவது நினைத்துக் கொண்டு இருந்தால், கணவரோ தன் மீது காதல் குறைந்து விட்டது என்றும், தன்னைப் பற்றி நினைக்காமல், தனக்கான நேரம் ஒதுக்காமல் வேறு வேலை செய்யும் பெண்ணை நினைக்கும்போது குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் ஒரு வித பதற்றம் உருவாகி விடுகிறது. காதலுக்கும், காமத்துக்கும், பிரிவுக்கும் என்று முக்கோண இடங்களில் மட்டுமே பெண்ணின் இருப்பு இருந்துள்ளது என்று மிகத் தீர்க்கமாக நம்புகிறார்கள். இதில் ஒரு இடத்தில் பெண்ணின் இருப்பு குறைந்தாலும், அவளுக்கு குற்ற உணர்வையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி விடுவார்கள்.

ஆனால் கல்வியின் வளர்ச்சியால், சமூகத்தில் உள்ள பெண்களின் குணங்களும் மாறியுள்ளது. அதனால் துறை ரீதியாக மட்டுமே இயங்கும் போது, அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், அவர்கள் மீதே சுய சந்தேகம் பெண்களுக்கு வர ஆரம்பித்து விடும். ஆனால் கலாச்சார ரீதியாக, உளவியலில் குடும்பத்தில் பெண்ணின் பங்கு குறையும் பொழுது அதில் மிகச்சோர்வாக பெண் ஏதோ ஒரு இடத்தில் தயங்கி நின்று விடுகிறாள். துறைகளின் வளர்ச்சியும், குடும்ப மாற்றமும் பெண்களுக்கு அவர்கள் நம்பிய கலாச்சார நம்பிக்கைகளை பயந்தும், பதற்றத்திலும் சிலர் தங்களின் கனவுகளுக்காக கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கிறார்கள்.

ஏனென்றால் தற்போது பல ஊர்களில், பல மாநிலங்களில் சாதாரண பெண்கள் அரசியலுக்கு வருவதும், புது ஸ்டார்ட்டப் பிசினஸில் தங்களுடைய ஐடியாக்களை சொல்லி, புது வாய்ப்புகளையும், அதற்கான டிமாண்ட்களையும் உருவாக்கி வருகிறார்கள். பெண் தொழில் முனைவோர்களுக்கு என்று மார்க்கெட்டிங் மீட்டிங்ஸ் மற்றும் லீடர்ஷிப் ப்ரோக்ராம் என்று பெண்களுக்கு சொல்லித் தர பல குழுக்கள் இருக்கிறது.

ஆண், பெண் உறவில் பெண்ணை உணர்ச்சி பூர்வமாக செயல்பட விடாமல் பெண்களால் தடுக்க முடியும். அதற்கு மிக முக்கியமான காரணங்களில் நம் சோசியல் மீடியாவையும், சினிமாவையும், இலக்கியத்தையும் சொல்ல முடியும். இன்றையக் காலக்கட்டத்தில் உள்ள மற்ற பெண்கள் விதம்விதமாக தங்களுடைய கடினப்பாதையை, உழைப்பதற்காக எப்படி குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே மாற்றினார்கள் என்று வெளியே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதனால் குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே எப்படி வேலையை மற்றும் அவர்களுக்கான வளர்ச்சியை எந்தத் திசையில் கொண்டு போக முடியும் என்று இனம் கண்டுகொண்டுள்ளனர்.

ஆனால் இந்த மாற்றத்தை திருமண வாழ்வில் இருக்கும் ஆண்களுக்கும் மற்றும் சமூகத்தில் உள்ள ஆண்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கிறது. இங்கு பெண் படித்தால், அதை வைத்து ஏதோ ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்கிறாள் என்பது வரை சரி என்று ஒத்துக் கொண்டார்கள். ஆனால் தன்னையும், குடும்பத்தையும் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு வேலையைப் பார்ப்பது அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று நினைக்கிறார்கள். வேலையைப் பற்றி மட்டும் சிந்திக்கிறாள் என்று புரிந்தாலும், இந்த மாற்றத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. அதனால் பலவிதமாக பேசி பெண் புரிய வைக்க முயற்சி செய்து வருகிறாள்.

இப்படி அவள் வேலை பார்ப்பது அவளுக்கான அங்கீகாரம் கிடைப்பது, அவளுக்கான சுதந்திரத்தை அவளே ஏற்படுத்திக் கொள்கிறாள் என்பது தான் பெண் ஒர்க்கஹாலிக்காக இருக்கிறாள் என்று கூறுகிறார்கள். தற்போதைய சூழலில் வேலை கிடைப்பதும், அதில் வளர்ச்சியைக் காட்டுவதும் பெண்களுக்கு பெரிய பாரமாக இல்லை. ஒரு ஆண் எழுபது வயது வரை வேலை பார்த்தால், அவர் மிகப் பொறுப்பாக இருக்கிறார் என்று பேசும் சமூகம்தான், பெண் வேலை பார்க்கும்போது, குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காமல் இருக்கிறாள் என்று குற்றம் சாட்ட தொடங்கி விடுகிறார்கள். இந்த வித்தியாசத்தைதான் பெண்கள் தொடர்ந்து பொதுவெளியில் பேசி வருகிறார்கள். இந்த மாற்றத்தைச் சமூகமும், குடும்பமும் புரிந்து, வேலை பார்க்கும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற சூழலில் நம் கலாச்சாரமும், நவீன சமூக மாற்றமும் கண் முன்னாடி எடுத்துரைக்கிறது.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED குதிகால் வலி