×

சிறை மருத்துவமனையில் இருந்து கடந்த 1ம் தேதி தப்பிய மும்பை பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டில் சென்னையில் கைது

* செல்போன் சிக்னல் உதவியுடன் மும்பை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் பிடித்தனர்
* போதை பொருள் தயாரிக்க தனி தொழிற்சாலை நடத்தியவர்

சென்னை: மும்பை அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த 1ம் தேதி தப்பிய பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டில் சென்னையில் பதுங்கி இருந்த போது மும்பை தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மும்பை பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டில், கடந்த 2020ம் ஆண்டு ரூ.20 கோடி மதிப்புள்ள 20 கிலோ போதை பொருள் கடத்தல் வழக்கில் மும்பை போலீசார் லலித் பாட்டில் மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருக்கும் போது லலித் பாட்டிலுக்கு சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் சிறைத்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபர் 1ம் தேதி மும்பையில் உள்ள அரசு பொதுமருத்துவமனையில் உள்ள சிறை வார்டில் அனுதித்தனர். அப்போது லலித் பாட்டில் மருத்துவர்கள் மற்றும் சிறை வார்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறி அங்கிருந்து தப்பிவிட்டார். அதைதொடர்ந்து பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டிலை பிடிக்க மும்பை போலீசார் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் தனிப்படை போலீசார் லலித் பாட்டில் பயன்படுத்தும் செல்போன் சிக்னலை கண்காணித்து வந்த போது, அவர், சென்னையில் இருப்பதாக உறுதியானது.

அதைதொடர்ந்து மும்பையில் இருந்து வந்த தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக நோட்டமிட்டு சென்னை போலீசார் உதவியுடன் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மருத்துவமனையில் இருந்து தப்பிய லலித் பாட்டில் குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அடிக்கடி தனது செல்போன் மற்றும் சிம் கார்டுகளை மாற்றி வந்ததால் அவரை பிடிக்க முடியாமல் மும்பை தனிப்படை போலீசார் திணறினர். அதேநேரம், சைபர் க்ரைம் போலீசார் லலித் பாட்டில் கூட்டாளிகளின் செல்போன் எண்களை வைத்து லலித் பாட்டில் பயன்படுத்தும் செல்போன் எண்ணை கண்காணித்து சென்னையில் இருப்பதை உறுதி செய்து கைது செய்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள லலித் பாட்டில் மீது பெரிய அளவில் ரூ.130 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் என்ற ஒரு வகை போதை பொருளை தனியாக பயோடேக் தொழிற்சாலையில் தயாரித்து சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு அனுப்பிய வழக்கும் இவர் மீது நிலுவையில் உள்ளது. அதேபோல் கடந்த 2020ம் ஆண்டு லலித் பாட்டில் கைது செய்யப்பட்டாலும், அவர் சிறையில் இருந்து தனது ஐ-போன் மூலம் போதை பொருட்களை தடையின்றி தனது அடியாட்களை வைத்து நடத்தி வந்துள்ளார்.

சென்னையில் லலித் பாட்டில் தங்க போதை பொருள் கடத்தல் கும்பல் யாரேனும் உதவி செய்துள்ளார்களா என்ற கோணத்தில் மும்பை போலீசார் மாநகர காவல்துறை உதவியை கோரியுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரபல மும்பை போதை பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சிறை மருத்துவமனையில் இருந்து கடந்த 1ம் தேதி தப்பிய மும்பை பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டில் சென்னையில் கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Lalit Patil ,Chennai ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!