×

அதிமுக ஆட்சியின்போது மருந்துகள் இறக்குமதி செய்ததில் பல கோடி வரிஏய்ப்பு; 5 மருந்து கம்பெனிகளில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறை விசாரணை

சென்னை: வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக 5 நிறுவனங்களுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியின்போது கொரோனா காலக்கட்டத்தில் அவசர தேவைக்காக மருந்துகள் தயாரிப்பு மற்றும் மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவ்வாறு இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்ட மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்து மொத்த கொள்முதல் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை வேப்பேரியில் உள்ள கே.வி.எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பார்க் டவுன் பகுதியில் உள்ள மருந்துகள் மொத்த கொள்முதல் செய்யும் கவர்லால் குழு நிறுவனம், மாதவரம் பகுதியில் உள்ள ஆதிஷ்வர் எக்ஸிபியண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பார்க் டவுன் பகுதியில் உள்ள கே.பி.மனிஷ் குளோபல் நிறுவனம், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கவ்மன் எக்ஸாக்ட் மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என 5க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு மற்றும் மொத்த கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் செலுத்திய வருமான வரித்துறை கணக்கிற்கும், தற்போதுள்ள நிதியாண்டில் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியதில் பல கோடி ரூபாய் முரண்பாடுகள் இருப்பதும், பல நூறு கோடி அளவுக்கு வருவாயை குறைத்து கணக்கு காட்டியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்ட 5 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தும் வகையில், நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவனில் 20 க்கும் மேற்பட்ட வாடகை கார்களை வரவழைத்தனர். பிறகு 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை ஒரே நேரத்தில் 20 கார்களில் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ஸ்கோப் இன்கிரீடியன்ட்ஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அண்ணாசாலை சயல் மேன்ஷன் வளாகத்தில் உள்ள 5வது மாடியில் இயங்கி வரும் கவ்மன் எக்ஸாக்ட் மருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மருந்து கிடங்குகளிலும் சோதனை நடந்து வருகிறது.

கவுகார்பேட்டையில் அலங்கார் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள மருந்து நிறுவனம், ேவப்பேரியில் உள்ள கே.வி.எண்டர்பிரைசஸ் நிறுவனம், மாதவரத்தில் உள்ள நடராஜன் தெருவில் உள்ள ஆதிஷ்வர் எக்ஸிபியன்ட்ஸ் நிறுவனம், பார்க் டவுன் பகுதியில் உள்ள மருந்து மொத்த கொள்முதல் நிலையங்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் கடந்த 2021ம் ஆண்டு வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த ஆவணங்களை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், கொரோனா காலத்தில் மருந்துகள் கொள்முதல் செய்ததில் இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததும், உற்பத்தியை குறைத்து கணக்கு காட்டியதற்கான ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சோதனை முடிவிற்கு பிறகு தான் எத்தனை கோடி ரூபாய் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் மருந்து மொத்த கொள்முதல் நிறுவனங்கள் வரிஏய்ப்பு செய்துள்ளது என்ற முழு விபரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு மற்றும் மருந்து கொள்முதல் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் மருந்து உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அதிமுக ஆட்சியின்போது மருந்துகள் இறக்குமதி செய்ததில் பல கோடி வரிஏய்ப்பு; 5 மருந்து கம்பெனிகளில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...