×

போரினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காசா மருத்துவமனை மீது குண்டுவீச்சு: 500 அப்பாவிகள் படுகொலை

* சம்பவத்திற்கு பொறுப்பேற்க இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் மறுப்பு
* பிடனுடனான சந்திப்பை ஜோர்டன், பாலஸ்தீனம், எகிப்து புறக்கணிப்பு

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடக்கும் போரில் சிக்கி படுகாயமடைந்த மக்கள் காசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த மருத்துவனையின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 500 அப்பாவிகள் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் அமைப்பினர் பொறுப்பேற்க மறுத்தனர். இதற்கிடையே அமெரிக்க அதிபருடனான சந்திப்பை ஜோர்டன், பாலஸ்தீனம், எகிப்து தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக, இன்று உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் போர் அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.

இருதரப்பும் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் 12 நாட்களில் பலியான நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரமான காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து வான்ெவளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு காசா எல்லையில் இஸ்ரேல் தனது ராணுவத்தை குவித்து வைத்துள்ளது. எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் இருந்த நிலையில், போரின் உக்கிரத்தை வெளிப்படுத்தும் விதமாக நேற்றிரவு காசாவின் அல்-அஹ்லி மருத்துவமனையின் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலால் நூற்றுக் கணக்கானோர் கண்ணிமைக்கும் நேரத்தில் பலியானார்கள். மருத்துவமனையின் மீதான தாக்குதல் விவகாரத்தில், ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட ராக்கெட் தாக்குதலின் தோல்வி தான் இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் என இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் அமைப்பினர் மறுத்துள்ளனர். இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இத்தகைய சூழலில்தான் இந்த மருத்துவமனையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்ததாகவும், புகலிடம் தேடி அடைக்கலம் கொண்டிருந்த ஐநா பள்ளியின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே போரால் ஏற்பட்ட பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், வான்வெளி தாக்குதல் சம்பவத்தால் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளன.

இதனிடையே, போரில் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழியும் ரபாவில் உள்ள மருத்துவமனையை மூடுவதற்கு இஸ்ரேல் இரு முறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக குவைத் பல்நோக்கு மருத்துவமனை தெரிவித்துள்ளது. நோயாளிகள் பெருமளவில் உள்ளதால் மருத்துவமனையை மூடுவதற்கு நிர்வாகம் மறுத்துள்ளது. காசாவில் இருந்து எகிப்துக்கு வெளியேற இருந்த ஒரே ராஃபா எல்லையோர வழித்தடமும் சேதமானது. உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி இல்லாமல் தெற்கு காசாவின் தெருக்களில் லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் பதுங்கு இடங்கள், கட்டமைப்புகள், கட்டுப்பாட்டு மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜோர்டானிய மன்னர் அப்துல்லா, இன்று இஸ்ரேல் வருகை தரும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாசும் இந்த சந்திப்பில் பங்கேற்க இருப்பதாக இருந்தது. ஆனால் அல்-அஹ்லி மருத்துவமனை மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் ஜோர்டானிய மன்னர் அப்துல்லா, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் ஆகியோர் உடனான சந்திப்பை ரத்து செய்தார். பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாசும் அந்த சந்திப்பு கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்தார். உலக தலைவர்களின் சந்திப்பு ரத்தானதால், இஸ்ரேல் – காசா போரானது மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஐ.நா மனித உரிமைகளுக்கான தலைவர் வோல்கர் டூர் கூறுகையில், ‘காசா மருத்துவமனையின் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கொடுமைகளை சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மருத்துவமனைகள் புனிதமான இடங்கள். அங்கு கொலைகள், வன்முறைகள் சம்பவங்கள் நடப்பதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் சென்றடைய அனுமதிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

பிடனின் ஜோர்டன் பயணம் ரத்து
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தனது உறுதியான ஆதரவை தெரிவித்து வருகிறது. போர் தீவிரமாகும் பட்சத்தில் எந்த நேரத்திலும் இஸ்ரேலுக்கு உதவும் வகையில் தன்னுடைய மிகப்பெரிய போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தியுள்ளது. மேலும் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் அடங்கிய சரக்கு விமானம் ஒன்றை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இஸ்ரேல் புறப்படும் முன் வெளியிட்ட பதிவில், ‘ஹமாஸ் போர் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமையை வலியுறுத்த இஸ்ரேலுக்கு செல்கிறேன். மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், தலைவர்களை சந்திக்கவும் ஜோர்டனுக்கும் செல்கிறேன். எகிப்து – காசா இடையேயான ரபா பகுதியை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது’ என்று கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தனது இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜோர்டன் செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணத்தை அதிபர் ரத்து செய்தார்.

அமெரிக்க தூதரகம் முற்றுகை
காசா மருத்துவமனை தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக பொதுமக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அவர்கள் தூதரக வளாகத்தின் சுவர்களின் மீது பாலஸ்தீனக் கொடியை கட்டினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் போராட்டக்காரர்களின் கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதன்பின்னரே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். அதேபோல் பிரான்ஸ் தூதரகத்திற்கு வெளியே கூடிய போராட்டக்காரர்கள், தூதரக கட்டிடத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

‘ரெட்’ கோடுகளை தாண்டிய இஸ்ரேல்
* பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அளித்த பேட்டியில், ‘அல் அஹ்லி மருத்துவமனையில் நடந்த ராக்கெட் தாக்குதல் சம்பவமானது, கொடூரமான படுகொலை. இஸ்ரேல் சிவப்புக் கோடுகளையும் தாண்டி தாக்குதல் நடத்தி உள்ளது’ என்று கூறினர்.
* ஈரான் வெளியுறவு அமைச்சர் அமிரப்துல்லாஹியன் விடுத்துள்ள பதிவில், ‘அல்-அஹ்லி மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதிகள் அரங்கேற்றும் கொடூரத்தை காட்டிலும், இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது’ என்று கூறியுள்ளார்.
* ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாட் மன்சூர் கூறுகையில், ‘இஸ்ரேல் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஒரு பொய்யான மனிதர்’ என்று கூறினார்.

உளவு தகவல்கள் பரிமாற்றம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆலோசகர் மார்க் ரெகேவ் கூறுகையில், ‘இஸ்ரேல் – அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்தது. எங்களிடம் இருந்த தரவுகளை அமெரிக்க அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டோம். காசா மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வான்வெளி தாக்குதல், இடைமறிப்பு தகவல் தொடர்பு விவரங்கள் அமெரிக்க உளவுத்துறையிடம் வழங்கப்பட்டது’ என்று கூறினார். ஆனால் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், இஸ்ரேல் அதிகாரியின் கருத்தை உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து எப்பிஐ இயக்குனர் கிறிஸ்டோபர் வ்ரே கூறுகையில், ‘சர்வதேச உளவுத்துறை அதிகாரிகள், மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்’ என்றார்.

ஐ.நா செயலர் கண்டனம்
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்ட பதிவில், ‘காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருத்துவ பணியாளர்கள், ஐநா வளாகங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். அல் மகாசி அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா பள்ளியின் மீது நடந்த தாக்குதலில் ஆறு பேர் பலியான சம்பவத்தையும் கண்டிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் மறுப்பு
காசா மருத்துவமனை மீதான தாக்குதல் சம்பவம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட பதிவில், ‘காசா மருத்துவமனையின் மீதான தாக்குதலை நடத்தியது பயங்கரவாதிகளே தவிர, இஸ்ரேல் ராணுவம் அல்ல என்பதை உலக நாடுகள் அறிய வேண்டும். எங்களின் நாட்டு குழந்தைகளை கொடூரமாக கொன்றவர்கள், தங்களது குழந்தைகளையும் கொன்று வருகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில், ‘​காசா ​மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு, இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு தான் காரணம். காசாவில் உள்ள மருத்துவமனையை குறிவைத்து பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இஸ்ரேலை நோக்கி எதிரிகளால் ஏவப்பட்ட ராக்கெட்டுகளில் ஒன்று தோல்வியடைந்ததால், அந்த ராக்கெட் மருத்துவமனையின் மீது விழுந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

அழகியின் பதிவுக்கு குட்டு
அமெரிக்க மாடல் அழகி ஜிகி ஹடிட் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் படுகொலை செய்வதில், எந்தவித வீரமும் இல்லை. இஸ்ரேலிய அரசை கண்டிப்பது யூத விரோதமும் அல்ல; பாலஸ்தீனியர்களை ஆதரிப்பது ஹமாஸை ஆதரிப்பதாகவும் கருதமுடியாது’ என்று அவர் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கருதப்படுவதால், பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், மாடல் அழகியின் பதிவுக்கு பதிலளித்துள்ளது. அதில், ‘கடந்த வாரம் நீங்கள் தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? அல்லது யூதக் குழந்தைகள் அவர்களின் வீடுகளில் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் நிற்கும் இடத்தில், நீங்கள் நன்றாக இருப்பது எங்களுக்கு தெளிவாக தெரிகிறது. காரணம் உங்களை நாங்கள் பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளது.

ஐ.நா அவசர கூட்டம்
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தொடர்பான விசயங்கள் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளதால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. காசாவில் மருத்துவமனை மீதான தாக்குதலை தொடர்ந்து, இந்த அவசர கூட்ட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பஹ்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post போரினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காசா மருத்துவமனை மீது குண்டுவீச்சு: 500 அப்பாவிகள் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israel ,Hamas ,Jordan, Palestine ,Egypt ,Biden ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...