×

பூஜை என்ற பெயரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; பூசாரிக்கு 29 ஆண்டுகள் சிறை: கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

கரூர்: பூஜை என்ற பெயரில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பூசாரிக்கு 29 ஆண்டுகள்  சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே பாளையத்தை சேர்ந்தவர்  கணபதி(60). பூசாரியான இவர், பக்தர்களுக்கு நினைத்த காரியம் நடப்பதாக கூறி வீட்டில் பூஜை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்த வெங்கமேடு பகுதியை சேர்ந்த 40 வயதான விதவை பெண், பூசாரி வீட்டுக்கு வெள்ளிக்கிழமை தோறும் சென்று பூஜை  செய்துள்ளார். 
அப்போது பூசாரி கணபதி, உன்னுடைய 3 மகள்களை தனித்தனியாக பூஜைக்கு  அனுப்பினால் நினைத்த காரியம் நிறைவேறும் என விதவை பெண்ணிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண், தனது 3 மகள்களை பூஜைக்கு  தனித்தனியாக அனுப்பி வைத்துள்ளார். அப்போது பூஜைக்கு வந்த சிறுமிகளுக்கு பிரசாதம்,  பொங்கல் கொடுத்த கணபதி, 3 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமிகள் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளனர். 
இதுகுறித்து விதவை பெண், கடந்த 2019 மே 10ம் தேதி வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பூசாரி கணபதியை கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  நசீமா பானு, பூசாரி கணபதிக்கு 29ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. ஓரு  லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 

The post பூஜை என்ற பெயரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; பூசாரிக்கு 29 ஆண்டுகள் சிறை: கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Puja ,Karur Mahla ,Karur ,Pooja ,Court ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...