×

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.. அப்பாவி மக்கள் 500 பேர் பலி; பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதாக ஹமாஸ் தாக்கு!

காசா : காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுவர்கள், நோயாளிகள் என அப்பாவி மக்களை பலிகொண்ட தாக்குதல்களுக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான யுத்தம் 12வது நாளாக தொடர்ந்து வருகிறது. எல்லையில் 3 லட்சம் துருப்புகளை தயார் நிலையில் வைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக காசாவில் உள்ள அப்பாவி மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரபாவில் 27 பேரும், கான் யூனிஸ் நகரத்தில் 30 பேரும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளான காசா மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் காயம் அடைந்தவர்கள், மற்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சர்வதேச போர் சட்டங்களை மீறி இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருவதாக கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு, காசாவில் மட்டும் இதுவரை 3,000த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.இதனிடையே மருத்துவமனை மீது தங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மறுப்பு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவிய ராக்கெட் தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்ததை தங்கள் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.. அப்பாவி மக்கள் 500 பேர் பலி; பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதாக ஹமாஸ் தாக்கு! appeared first on Dinakaran.

Tags : Israeli army attack ,Gaza ,Hamas ,Palestinians ,Al Ahli ,Dinakaran ,
× RELATED முடிவின்றி நீடிக்கும் இஸ்ரேல்...