×

ஊராட்சி மன்ற பெண் தலைவர், கணவர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு கதவு, ஒயர்கள் திருடிச்சென்றதாக

ஒடுகத்தூர், அக்.18: ஒடுகத்தூர் அருகே அரசு பொதுசுகாதார வளாகத்தை இடித்து கதவு, ஒயர்களை திருடி சென்றதாக ஊராட்சி மன்ற பெண் தலைவர், கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளி ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் வெற்றி பெற்று தலைவராக அப்போது பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், தோளப்பள்ளி ஊராட்சி இம்முறை ஆதிதிராவிடர் பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், தலைவராக வெற்றி பெற்ற கல்பனா சுரேஷ் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்றும், தேர்தல் வேட்புமனுவில் போலியான சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. இதனால், கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் செயல்படும் விழிக்கண் குழு தொடர் விசாரணை நடத்தியதில் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்று உறுதியானது. மேலும், இவர் முறைகேடாக சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது வங்கி கணக்குகள் (செக் பவர்) ரத்து செய்யப்பட்டு, விழிக்கண் குழு தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், தோளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அந்த கட்டிடம் பழுதடைந்து பயன்பாடின்றி மாறிவிட்டது. எனவே, பழுதடைந்த இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதியதாக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டனர். அதன்படி கடந்த மாதம் 20ம்தேதி ஊராட்சி மன்ற தலைவி கல்பனா மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து உரிய அனுமதியில்லாமல் ஜேசிபி மூலம் அரசு பொது கழிப்பிட கட்டிடத்தை இடித்துள்ளனர். கழிவறையில் இருந்த இரும்பு கதவுகள், கேபிள் ஒயர்களை எடுத்து சென்றார்களாம். இதுகுறித்து அதேபகுதியை சேர்ந்த பாக்கியராஜ் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதில், ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது கணவருடன் சேர்ந்து கதவு மற்றும் கம்பிகளை திருடி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஊராட்சி மன்ற பெண் தலைவர், கணவர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு கதவு, ஒயர்கள் திருடிச்சென்றதாக appeared first on Dinakaran.

Tags : Panchayat council ,Odukathur ,Odugathur ,
× RELATED வனப்பகுதியில் இறந்து கிடந்த...