×

அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழா எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை: பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: அதிமுக 52வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் நேற்று காலை 11.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து, அங்கு கூடி இருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், பொன்னையன், கோகுலஇந்திரா மற்றும் தமிழ்மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது, கட்சி பணிகளை தீவிரப்படுத்துவது மற்றும் ஒரு தொகுதிக்கு 2 ஆயிரம் பூத்கள் அமைப்பது, பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அமைப்புகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், 52வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்ட அளவில் அதிமுகவினர் கட்சி கொடியை ஏற்றி வைத்து, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினர். இதேபோல் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள், அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நேற்று சென்னை, அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* எடப்பாடியை வரவேற்பதில் கோஷ்டி மோதல்

எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏராளமானோரை அழைத்து வந்திருந்தார். இதற்கு போட்டியாக தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் தி.சத்யாவும் நேற்று காலை எடப்பாடி வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்கூட்டியே ஆட்களை கூட்டி வந்து கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நிறுத்தி இருந்தார். இதனால் கோபம் அடைந்த ஆதிராஜாராம், தி.நகர் சத்யா ஆதரவாளர்களை கட்சி அலுவலகத்துக்கு வெளியே நிற்கும்படியும், தனது ஆதரவாளர்களை கட்சி அலுவலகத்துக்குள் இருந்து எடப்பாடியை வரவேற்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார். அப்போது கட்சி அலுவலகம் வந்த தி.நகர் சத்யாவு – ஆதிராஜாராம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆதிராஜாராம் ஆதரவாளர்கள் தி.நகர் சத்யாவை காருக்குள் இருந்து இறங்க முடியாதபடி முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

The post அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழா எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை: பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Aimuga 52nd Annual Inaugural Ceremony MGR ,Eadapadi ,Jayalalitha ,Booth Committee ,Chennai ,Rayapet ,Ava ,Jeyalalitha ,Statue ,Adappadi Evening ,Setting Up Booth Committee ,Dinakaran ,
× RELATED சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை...