×

பொறியியல் கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக கொண்டு வந்துள்ள நிலையில் தமிழர் மரபு, தமிழரும் தொழில்நுட்பமும் என்ற இரு பருவங்களுக்கான பாடதிட்டம் அறிமுகம்: துணைவேந்தர் வேல்ராஜ் தகவல்

சென்னை: பொறியியல் தொழில்நுட்ப தமிழ்வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மண்டல அளவிலான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சென்னையில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 120க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழரின் விருந்தோம்பல் பண்புகள், தமிழரின் நாட்டுப்புறக் கலைகள், செம்மொழியாம் தமிழ்மொழி, இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பு, தமிழர் நுண்கலைகள், தமிழர் மருத்துவம் என்ற பொருண்மையில் பேச்சுப்போட்டியில் 52 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதைப்போன்று தமிழர் கட்டிடக் கலைத் தொழில்நுட்பம், தமிழர் கடல்சார் அறிவு, தமிழர் புழங்குப் பொருள் தொழில்நுட்பம், கணினி மற்றும் அறிவியல் தமிழ், தமிழரின் வணிக மேலாண்மை, திருக்குறளில் மேலாண்மை சிந்தனைகள் முதலான பொருண்மைகளில் கட்டுரைப் போட்டியில் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அண்ணாபல்கலைக்கழகம் துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், ‘‘அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழர் மரபு, தமிழரும், தொழில்நுட்பம் என்ற இருபருவத்திற்கான பாடத்திட்டங்களையும், அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பாடத்திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் 23 பேராசிரியர்களை முறையான தேர்வு அடிப்படையில் நியமித்துள்ளது. இவர்கள் முதல் பருவத்திற்கான தமிழர் மரபு என்ற நூல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எளிமையாகக் கற்பதற்கு ஏற்புடையதாக இருக்கும்’’ என்றார்.

The post பொறியியல் கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக கொண்டு வந்துள்ள நிலையில் தமிழர் மரபு, தமிழரும் தொழில்நுட்பமும் என்ற இரு பருவங்களுக்கான பாடதிட்டம் அறிமுகம்: துணைவேந்தர் வேல்ராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Velraj ,Chennai ,Engineering Technology Tamil Development Centre ,Anna University ,Department of Tamil Nadu Tamil Nadu Development Department ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...