×

விளையாட்டு நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை: ‘ஜீரோ’ குஜராத்துக்கு ரூ.608 கோடி ‘ஹீரோ’ தமிழ்நாட்டுக்கு ரூ.33 கோடியா?

சர்வதேச விளையாட்டுப் போட்டி ஒன்றின் பதக்க வேட்டையில் இந்தியா முதல் முறையாக சதம் அடித்ததை நாடே கொண்டாடியது. சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில்தான் இந்தியா 107 பதக்கங்களை அள்ளியது. ஜகார்தாவில் 2018ல் நடந்த போட்டியில் 70 பதக்கங்களை வென்றதே முந்தைய அதிகபட்சமாக இருந்தது. இந்த மகத்தான சாதனையை, அதற்கு காரணமான வீரர், வீராங்கனைகளை மக்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். அதை விட இந்த வெற்றிக்கு அதிகம் உரிமை கொண்டாடுவது ஒன்றிய அரசுதான். ஆனால், அதற்கான பங்களிப்பை ஒன்றிய அரசு செய்ததா என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில்கள் அதிர்ச்சியானவை.

விளையாட்டுத் துறையில் பாஜ. அரசின் அதிகபட்ச சாதனை, தேசிய விளையாட்டுப் போட்டிகளின் பெயர்களை மாற்றியதுதான். கேலோ இந்தியா சீனியர், கேலோ இந்தியா ஜூனியர், கேலோ இந்தியா பல்கலை. போட்டிகள் என எல்லாவற்றுக்கும் இந்தி பெயர் வைப்பதில்தான் ஒன்றிய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. பேர் வைப்பதில் காட்டிய ஆர்வத்தை… விளையாட்டை மேம்படுத்துவதிலும், அதற்காக உரிய நிதி ஒதுக்குவதிலும் காட்டவில்லை. அதிலும் சொந்த மாநிலம், பாஜ. ஆளும் மாநிலம், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலம் என பாரபட்சம் காட்டுவதில் ஒன்றிய அரசு ‘புகுந்து விளையாடி’ வருகிறது. குஜராத் மாடல் என தம்பட்டம் அடிக்கும்ம் அந்த மாநிலத்தில், குடிசைகளை சுவர் எழுப்பி மறைத்த வரலாறு இன்னும் மறையவில்லை. அந்த மாடலை மேம்படுத்த கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத்துக்கு ரூ.608 கோடி ஒதுக்கப்பட்டது.

ஒட்டுமொத்த இந்தியாவுக்கான நிதியே ரூ.2754 கோடிதான். சரி… ஐந்தாண்டுகளில் இவ்வளவு நிதி ஒதுக்கியும் அந்த மாநிலத்தில் இருந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வீரர்களின் எண்ணிக்கை வெறும் 6 தான். அவர்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 0. அதே சமயம்… ஒன்றிய அரசால் அலட்சிப்படுத்தப்பட்ட மாநிலங்கள் இரட்டை இலக்கங்களில் பதக்க வேட்டை ஆடியிருக்கின்றன. எனவே, ஏற்கனவே ‘டமால்’ ஆன குஜராத் மாடல் பெயரை சொல்லி ஏமாற்றாமல், எல்லா மாநிலங்களையும் ஒன்றிய அரசு சரிசமமாக நடத்த வேண்டும். அப்படி செய்தால் ஆசிய விளையாட்டில் மட்டுமல்ல அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா பதக்கங்களை அள்ளிக் குவிக்கும்.

* கர்நாடக மாநிலத்துக்கு நிதி ஒதுக்கியபோது அங்கு பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

* தனது ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, விரைவில் தேர்தல் நடைபெறும் மாநிலமாக இருந்தாலும் கூடுதல் ஒதுக்கீடு செய்கிறார்கள்.

* ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆண்டாலும், இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதை கருத்தில் கொண்டு அதிக திட்டங்களுக்கு அதிக நிதி அளித்திருக்கிறார்கள்.

* இந்த 5 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு இன்னும் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

* அதிக நிதி ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ள குஜராத்துக்கான 5 திட்டங்களில் 4 திட்டங்கள் முழுமையாக முடிந்து விட்டன. எஞ்சிய ஒரு திட்டம் விரைவில் முடிய உள்ளது.

* ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் செயற்கை இழை தடகள பாதை அமைக்க 23-10-2020ல் அனுமதி அளிக்கப்பட்டது. 3 ஆணடுகள் முழுமையாக முடியப் போகிறது. அதற்கான திட்ட மதிப்பீடான ரூ.7 கோடியில் இதுவரை ஒரு சதவீதம் கூட ஒதுக்கீடு செய்யவில்லை.

* போராட வேண்டியிருக்கிறது…

பல மாநிலங்களில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இன்றும் சத்தான உணவு, தேவையான விளையாட்டு உபகரணங்கள், பயணச் செலவு ஆகியவற்றுக்காக போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். தமிழ்நாடு பொருளாதாரத்தில் மேம்பட்ட தற்சார்புள்ள மாநிலமாக இருக்கிறது. நமக்கு கிடைத்திருக்கிற முதல்வரும், அமைச்சரும் விளையாட்டையும், வீரர் வீராங்கனைகளையும் ஊக்குவிப்பதில், உதவி செய்வதில் ஆர்வமாக உள்ளனர். அதனால் இங்கு தொடர்ந்து சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை ஒதுக்கினால் இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க முடியும், சர்வதேச அளவில் பதக்கங்களை அள்ள முடியும். எனவே விளையாட்டு வீரர்களை உருவாக்குவது, கட்டமைப்புகளை மேம்படுத்துவது, வீரர், வீராங்கனைகளுக்கு வேண்டிய வசதிகளை செய்வது என எல்லாவற்றுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதில் வேறுபாடுகள் பார்க்கக் கூடாது. எந்த மாநில வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் வென்றாலும் அது இந்தியாவுக்குதான் பெருமை. அதனால் நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாகுபாடு பார்க்கக் கூடாது. பதக்கங்கள் வெல்லும் விளையாட்டுகளை பொறுத்து, அந்தந்த மாநிலங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம். – தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா

The post விளையாட்டு நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை: ‘ஜீரோ’ குஜராத்துக்கு ரூ.608 கோடி ‘ஹீரோ’ தமிழ்நாட்டுக்கு ரூ.33 கோடியா? appeared first on Dinakaran.

Tags : Union government ,Tamil Nadu ,India ,China ,Gujarat ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...