×

மனுதாரர்களை நானே தொடர்புகொண்டு தீர்வு கிடைத்ததா என கேட்பேன்: காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மனுக்கள் தொடர்பாக, சில மனுதாரர்களை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வுகள் பற்றி கேட்டறிய முடிவு செய்திருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் பேசியதாவது:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி அதிகம் காணக்கூடிய மாவட்டங்கள். குற்ற நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும், காரணங்களும் இங்கு அதிகம் உள்ளன. எனவே, காவல்துறை அதிகபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும். பள்ளிகள் கல்லூரிகள் அருகே பெட்டி கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கள்ளச்சாரயப் புழக்கத்தை தடுப்பதில் உள்ள சிரமங்களைக் கண்டறிந்து, அவற்றை ஒழிப்பதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

எங்கள் மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டம் இல்லை என்று ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் உறுதி எடுத்து தடுத்துக் காட்ட வேண்டும். பொது மக்களிடையே தொடர்ந்து சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை காவல் துறையினர் ஏற்படுத்திட வேண்டும். பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று தருதல் போன்றவற்றில் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைதளங்களின் மூலம் வன்முறை மற்றும் சாதிய கருத்துக்களையும், வதந்திகளை பரப்புபவர்களையும் கண்காணிக்க வேண்டும்.

முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ்பெறப்படும் மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, சரியான தீர்வுகாணப்படவேண்டும். பொதுமக்கள் தங்களின் மனுக்களுக்கு தீர்வு ஏற்படாதா என்ற ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு எனக்கு மனுக்களை அனுப்புகிறார்கள். அந்த மனுக்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான விவரங்களை மனுதாரருக்கும் தெரிவித்திட வேண்டும். முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மனுக்கள் தொடர்பாக, சில மனுதாரர்களை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வுகள் பற்றி கேட்டறிய முடிவு செய்திருக்கிறேன்.

அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு சரியான முறையில் கிடைத்ததா, காவல் துறையினரால் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள இருக்கிறேன். எனவே, ஒவ்வொரு மனுவின் மீதும் முறையான விசாரணை செய்திட வேண்டும். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தவேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தேன். சில மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என எனக்கு தெரியவந்துள்ளது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post மனுதாரர்களை நானே தொடர்புகொண்டு தீர்வு கிடைத்ததா என கேட்பேன்: காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,M.K.Stal ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...