×

கேப்டன் எட்வர்ட்ஸ், மெர்வ், ஆர்யன் அபார ஆட்டம் நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்கா திணறல்

தர்மசாலா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டி, கன மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. இதனால் 7 ஓவர்கள் குறைக்கப்பட்டு, தலா 43 ஓவர் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்தது. விக்ரம்ஜித், மேக்ஸ் ஓ தாவுத் இணைந்து நெதர்லாந்து இன்னிங்சை தொடங்கினர்.

விக்ரம்ஜித் 2, மேக்ஸ் 18 ரன்னில் வெளியேற, அடுத்து பாஸ் டி லீட் 2, கோலின் ஆக்கர்மேன் 12, சைப்ரண்ட் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். நெதர்லாந்து அணி 20.2 ஓவரில் 82 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், தேஜா நிடமனரு – கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 30 ரன் சேர்த்தது. தேஜா 20 ரன், வான் பீக் 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நெதர்லாந்து 33.5 ஓவரில் 140 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியதால், அந்த அணியை 200 ரன்னுக்குள் சுருட்டிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தென் ஆப்ரிக்க வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

ஆனால், அனைவரது எதிர்பார்ப்பையும் கணிப்பையும் தவிடு பொடியாக்கிய நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் 53 பந்தில் அரை சதம் அடித்தார். எட்வர்ட்ஸ் – வாண்டெர் மெர்வ் ஜோடி அதிரடியில் இறங்க நெதர்லாந்து ஸ்கோர் இறக்கை கட்டி பறந்தது. மெர்வ் 29 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி என்ஜிடி வேகத்தில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் பிடிபட்டார். எட்வர்ட்ஸ் – மெர்வ் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கடைசி கட்டத்தில் எட்வர்ட்ஸ் உடன் இணைந்த ஆர்யன் தத் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு அமர்க்களப்படுத்த, நெதர்லாந்து 43 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன் குவித்து அசத்தியது.

எட்வர்ட்ஸ் 78 ரன் (69 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), ஆர்யன் தத் 23 ரன்னுடன் (9 பந்து, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் என்ஜிடி, யான்சென், ரபாடா தலா 2, கோயட்ஸீ, மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 43 ஓவரில் 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் அணிவகுக்க… 11.2 ஓவரில் 44 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.

டி காக் 20, கேப்டன் பவுமா 16, வாண்டெர் டுஸன் 4, மார்க்ரம் 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். இந்த நிலையில், கிளாஸன் – டேவிட் மில்லர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாகப் போராடியது. கிளாஸன் 28 ரன் எடுத்து வான் பீக் பந்துவீச்சில் விக்ரம்ஜித் வசம் பிடிபட, தென் ஆப்ரிக்கா 89 ரன்னுக்கு 5வது விக்கெட்டை இழந்து மேலும் பின்னடைவை சந்தித்தது.

The post கேப்டன் எட்வர்ட்ஸ், மெர்வ், ஆர்யன் அபார ஆட்டம் நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்கா திணறல் appeared first on Dinakaran.

Tags : Capt. ,Edwards ,Merv ,Aryan ,South Africa ,Netherlands ,Dharamsala ,ICC World Cup ODI ,Dinakaran ,
× RELATED 14 மக்களவை சீட் + 1 மாநிலங்களவை எம்.பி...