×

கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: காட்டாங்கொளத்தூரில் மக்களை நேரில் சந்தித்து குறை கேட்டார்

சென்னை: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திடீரென நேரில் விசிட் செய்து பொதுமக்கள் கோரிக்கையை கேட்டறிந்தார். ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். அதன்படி முதன் முறையாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து 1.2.2023 மற்றும் 2.2.2023 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, சேலம், மதுரை, விழுப்புரம், நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் பல்வேறு நாட்களில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அருகில் உள்ள மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்த விவரங்களை முதல்வர் நேரடியாக கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அலுவலகத்தின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்வர், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 66 மையங்களில் சுமார் 5000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தரமான உணவினை உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று அதிகாரிகளை முதல்வர் அறிவுறுத்தினார். மேலும், இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட வேண்டும் என்றும், குடிநீர் விநியோக பணிகள், பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை சீரமைத்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தொடர்ந்து, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்த மாணவியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

* பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்த விவரங்களை முதல்வர் நேரடியாக கேட்டறிந்தார்.

* மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் விசாரித்தார்.

* வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

The post கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: காட்டாங்கொளத்தூரில் மக்களை நேரில் சந்தித்து குறை கேட்டார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Chennai ,Kattangolathur ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...