×

திருப்போரூர் தொகுதிக்கு ரூ.101.05 கோடிக்கு திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்: எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ தகவல்

திருப்போரூர்: திருப்போரூர் தொகுதிக்கு ரூ.101.05 கோடிக்கு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அள்ளி தந்துள்ளார் என்று எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ கூறியுள்ளார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்ட அறிக்கை: திருப்போரூர் தொகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு கொண்ட மாமல்லபரத்தில் ஒரு முறையான பேருந்து நிலையம் இல்லை என்பது அந்த பகுதி மட்டுமல்ல, அங்கு வந்து செல்லும் தமிழ்நாட்டின் பிற பகுதி மக்கள், பிற மாநில மக்கள் இன்னும் சொல்லப் போனால் பிற நாட்டு மக்களின் குறையாக இருந்து வந்தது. இதனை போக்க கலைஞர் உரிய திட்டம் தீட்டினார் ஆனால் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் மெத்தனத்தால் அது வீணானது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மலர உள்ள மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இந்த குறை போக்கி மாமல்லபரத்தில் சிறப்பான பேருந்து நிலையம் அமையும் என உறுதியளித்து இருந்தேன். இந்த உறுதிமொழி அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதற்காக பெரிதும் முனைந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களிடம் தொகுதியின் 10 தலையாய கோரிக்கைகளை கேட்டு இருந்தார்.

திருப்போரூர் தொகுதி 10 கோரிக்கைகளில் இப்பேருந்து நிலையம் வேண்டும் என்றும் அதோடு கிழக்கு கடற்கரை சாலையின் (ஈசிஆர்) இருபுறம் அமைந்துள்ள மீனவ கிராமங்களும் பிற கிராமங்களும் இச்சாலையின் மட்டத்தில் இருந்து மிக குறைவான மட்டத்தில் அமைந்துள்ளது. இதனால், இந்த கிராமங்களை கிழக்கு கடற்கரை சாலையோடு இனைக்கும் சாலைகள் செங்குத்தாக அமைந்து இருப்பதால் கீழிருந்து மேலே வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் படுவேகமாக செல்லும் வாகனங்களோடு மோதி பல விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

இதனை தடுக்க இந்த இணைப்பு சாலைகளை மட்டத்தை உயர்திட வேண்டும் என்ற கோரிக்கையும், மிகவும் பின்தங்கிய சமூக பொருளாதார நிலையில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துமணை மிகவும் மோசமான சூழலில் இருப்பதால் அதை மேம்படுத்திடவும் வைக்கப்பட்ட கோரிக்கைகளை முதற்கட்டமாக நிறைவேற்றிடும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிநிறைவடாத நிலையில் இருந்த “தாத்தா இரட்டைமலை சீனிவாசன்” நினைவிடத்தை கட்டி முடித்திட ரூ.82 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை.

உங்கள் தொகுதியில் முதல்வர்-திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விருப்ப திட்டபணியின் கீழ் மாமல்லபுரத்தில் சர்வதேச தரத்தில் பேருந்து நிலையம் அமைத்திட ரூ.80 கோடி, திருக்கழுக்குன்றம் அரசு பொது மருத்துமணையினை சீரமைத்து தரம் உயர்த்திட ரூ.5.75 கோடி, கிழக்கு கடற்கரை சாலையின் (இசிஆர்) இருபுறம் உள்ள மீனவ கிராமங்களையும் இதர கிராமங்களையும் கிழக்கு கடற்கரை சாலையோடு இணைக்கும் சாலைகளின் மட்டத்தை உயர்த்திட ரூ.15.30 கோடி என மொத்தம் ரூ.101.05 கோடிக்கு திட்டங்களை அள்ளி தந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்போரூர் தொகுதி மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருப்போரூர் தொகுதிக்கு ரூ.101.05 கோடிக்கு திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்: எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tiruppurur ,SS Balaji MLA ,Tiruporur ,M. K. Stalin ,Tiruporur… ,S.S.Balaji ,MLA ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...