×

பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் இயக்குநர் ஆய்வு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் ஆய்வு செய்தார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி நேற்று ஆய்வு செய்தார். ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டிடப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை உள்பட திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். குறிப்பாக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், பொறியாளர் சிவக்குமார் உடனிருந்தனர்.

இதை தொடர்ந்து, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பல ஆண்டுகளாக கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதியில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைந்து குப்பை கழிவுகளை அகற்றி, தூய்மை காவலர்கள் பொதுமக்களிடமிருந்து குப்பை தரம் பிரித்து வாங்கி, அதனை முறையாக திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் உரமாக தயாரித்து சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர் மணிமேகலை, பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி குமார், பேரூராட்சியில் செயல் அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால் திட்ட பணிகள் முடங்குவதாகவும், நிரந்தரமாக செயல் அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பி பேரூராட்சி வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அப்போது, பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலர் யமுனா, பேரூராட்சி பொறியாளர் சிவக்குமார், கவுன்சிலர்கள் சுவப்னா முரளி, அஸ்மா அபிபுல்லா, ராணி ஜெயராமன், குணசேகரன், அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pallipatta ,Pothatturpet ,Pallipattu ,Pallippattu ,Dinakaran ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை