×

திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் திருமழிசையில் பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார். இந்நிலையில் திருவள்ளுர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட சாலைப் பணிகள், எரிவாயு தகனமேடை அமைத்தல் பணி மற்றும் அம்ருத் 2.0 குடிநீர் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா நேற்று திடீர் ஆய்வு செய்தார். திருமழிசை வருவாய் கிராமத்தில் 2.32 ஏக்கர் விஸ்தீரனத்தில் உள்ள வளமீட்பு பூங்காவில் புதிதாக கட்டப்பட்டு வரும் திடக்கழிவு, உலர் கழிவு தீர்வு செய்யும் அமைப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். மக்கும் குப்பையை கொண்டு உரமாக்கும் பணிகளை பார்வையிட்டு, பிளாஸ்டிக் கழிவுகளை தீர்வு செய்யும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், 2021-22ம் நிதியாண்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அன்பு நகர் சாலையை பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணியை பார்வையிட்டு, பகுதி பணிகள் முடிக்கப்பட்டு பெறப்பட்ட மான்யம் செலவிடப்பட்டதை உறுதி செய்து மீதம் உள்ள பணிகளை அம்ருத் 2.0 திட்ட குடிநீர் விநியோகப் பணிகளுக்கான பகிர்மான குழாய் பதிக்கப்பட்டதும் சாலைப் பணிகள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் தற்போது ஜாகுவார் சிட்டி பகுதியில் நடந்து வரும் பகிர்மானக் குழாய் பதித்தல் பணிகளை பார்வையிட்டு மண் அகழ்தல் பணிகள் செய்யும்போது தேவையான குழாய்களை பணியிடத்தில் இருப்பு வைத்துக் கொண்டு உடனுக்குடன் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு இல்லாமல் பணிகள் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நில அளவை எண்.242/1, திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல் பணி ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருவதை பார்வையிட்டு மயான வளாகத்தில் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் மரக்கன்றுகளை நட்டு பசுமை வளையம் ஏற்படுத்தவும், அருகில் உள்ள நிறுவனங்கள், குடியிருப்புகளில் பார்வையை மறைக்கும் வண்ணம் உயர் வளர்ச்சி கொண்ட மரங்களை நடுமாறு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொறுப்பு) லதா, செயல் அலுவலர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் சுபாஷினி, பணி மேற்பார்வையாளர் மதியழகன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் திருமழிசையில் பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kiran Kurala ,Thirumazhisai ,Thiruvallur ,Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்