×

ஊத்துக்கோட்டை அருகே தமிழக வாலிபர் வெட்டி கொலை?

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர எல்லை பகுதியில் வாலிபர் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து பிச்சாட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பிச்சாட்டூர் ஆரணியாற்றின் தடுப்பணை அருகில் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பிச்சாட்டூர் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ்வரலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த நபரின் கையில் ஆந்தை உருவம் பச்சை குத்தப்பட்டிருந்தது. மேலும் அந்த நபர் சிவப்பு நிற டீ சர்ட்டும், நீல நிற டிராக்கும் அணிந்திருந்தார். உடலின் அருகில் மதுபானம் மற்றும் குளிர்பான பாட்டில்கள் கிடந்தன. கொலை செய்யப்பட்ட நபர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என ஆந்திர போலீசார் சந்தேகிக்கின்றனர். இறந்த நபர் பற்றி அடையாளம் தெரிந்தால், உடனடியாக பிச்சாட்டூர் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ்வரலு கைபேசி எண் 9440900727க்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிச்சாட்டூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே தமிழக வாலிபர் வெட்டி கொலை? appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Uthukottai ,Oothukottai ,Andhra border ,Bichatur ,Nadu ,Dinakaran ,
× RELATED ஜமாபந்தி நிறைவு விழாவில் 125 மனுக்களுக்கு உடனடி தீர்வு