×

விருதுநகர் மாவட்டத்தில் 2 வேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் 2 வேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தீபாவளி நெருங்கும் நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட ரெங்கபாளையம் பகுதியில் சுந்தர மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கனிஸ்கா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அந்த வளாகத்திலேயே பட்டாசு விற்பனை செய்யும் கடையும் இருந்த நிலையில் பட்டாசுகளை வெடித்து சோதனை செய்த போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் 13 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த விபத்து குறித்து மட்டுமின்றி மற்ற ஆலைகளிலும் விதிமீறல்கள் உள்ளதா என்பதை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதேபோல சிவகாசி அருகே கிச்சனாயக்கன்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு வெடி விபத்தில் காயம் அடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு குவிந்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறினர். பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் 2 வேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர், தொழில் பாதுகாப்புத்துறை இணை இயக்குநர் அடங்கிய குழு விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post விருதுநகர் மாவட்டத்தில் 2 வேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar district ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ராஜபாளையம்