×

பழநி பகுதியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு; பச்சையாற்றில் தரைப்பாலம் துண்டிப்பு: போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி


பழநி: பழநி பகுதியில் தொடர்மழையால் பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பெருமாள்புதூர் கிராமத்தில் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர்.  திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே, பெருமாள்புதூர் கிராமத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக தற்காலிக தரைப்பாலம் அமைத்துள்ளனர். இந்த பாலத்தின் வழியாக அப்பகுதியில் உள்ள பெரியம்மாபட்டி, பச்சையாறு உள்ளிட்ட பல கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், பழநி அருகே உள்ள பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பெருமாள்புதூர் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் வழியாக செல்லும் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரியம்மாபட்டி, பச்சையாறு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் போக்குவரத்துக்கு அவதிப்பட்டனர். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையால், பழநி பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 65 அடி உயரம் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 43.73 அடி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 482 கனஅடி. அணையில் இருந்து விநாடிக்கு 9 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 28 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கனஅடி நீர் வருகிறது. இந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 58.12 அடி. நீர்வரத்து விநாடிக்கு 237 கனஅடி. அணையிலிருந்து விநாடிக்கு 7 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப் பகுதியில் 32 மி.மீ. பதிவாகியுள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பழநி பகுதியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு; பச்சையாற்றில் தரைப்பாலம் துண்டிப்பு: போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Palani ,Pacchiyar ,Pachai Yar ,Perumalputur village ,Pachaiyar ,Dinakaran ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை