×

விடிய, விடிய பட்டாசு வெடித்து யானைகளை விரட்டுகின்றனர்; ‘தும்பிக்கையான்’களால் தூக்கம் தொலைக்கும் வனத்துறையினர்: திருவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு


திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு வனப்பகுதி அடிவாரத்தில் இறங்கி வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு இரவு முழுவதும் வனத்துறையினர் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதனால், திருவில்லிபுத்தூர் பகுதிக்கு முன்னதாகவே தீபாவளி வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும் வகையில், வெடிச் சத்தம் இரவு முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், யானைகளை விரட்ட தினசரி வனத்துறை ஊழியர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் செண்பகத் தோப்பு வனப்பகுதி உள்ளது.

இப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள், மிளா மான்கள், காட்டெருமைகள், மரநாய்கள் அதிகமாக வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. பெரும்பான்மையான யானைகள் அடர்த்தியான மரங்கள் நிறைந்த மலை உச்சியில் திரியும்.

மலையடிவாரம் வரும் யானைகள்
ஆனால், கடந்த 10 நாட்களாக மாலை வேளைகளில் 4 மணி அளவில் மலை உச்சியிலிருந்து யானைகள் அடிவாரத்திற்கு கீழே இறங்கி செண்பகத்தோப்பு வனப்பகுதிக்கு வருகின்றன. இவ்வாறு கீழே இறங்கும் யானைகள் மலையடிவாரத்தை விட்டு வெளியேறி, அருகில் உள்ள சாலைகளை கடந்து சுமார் 2 கி.மீ தூரம் வரை சென்று தனியார் தோப்புகளில் முகாமிடுகின்றன. அங்குள்ள தென்னை, வாழை ஆகியவற்றை கீழே சாய்த்து நாசம் செய்கின்றன. இதனால், விவசாயிகள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என திருவில்லிபுத்தூர் ரேஞ்சர் கார்த்திக்கிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கடந்த 10 தினங்களாக யானைகளை விரட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் 10க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் விரட்டும்போது வனப்பகுதிக்குள் செல்லும் யானைகள், பின்னர் மீண்டும் விளைநிலங்களுக்கு வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

10 பேர் கொண்ட குழு
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் 10 பேர் கொண்ட வனத்துறையினர் தொடர்ச்சியாக யானைகளை வனப்பகுதிக்குள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையினர் கையில் தீப்பந்தம் வைத்தும், தகர டப்பாக்களை கொண்டு ஒலி எழுப்பியும் விரட்டுகின்றனர். நேற்று முன்தினம் இரவு தீப்பந்தங்களை கொண்டு யானைகளை விரட்டியபோது, கோபப்பட்ட யானைகள், வனத்துறையினரை விரட்ட தொடங்கியது. மேலும், அருகில் தும்பிக்கை மூலம் மரக்கிளைகளை ஒடித்து தூக்கி வீசியது. இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் போல ஒலி எழுப்பியும், அதிக லைட் வெளிச்சத்துடன் உள்ள ஜீப்பை பயன்படுத்தியும் யானைகளை விரட்டினர். இதையடுத்து பிளிரியபடியே யானைக் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. யானைகளை விரட்ட விடிய, விடிய பட்டாசு வெடித்தனர்.

வனப்பகுதியில் வனத்துறையினர் பட்டாசு வெடித்தது தீபாவளியை முன்னதாகவே வந்துவிட்டதா என்பதை போல உணரச் செய்தது. இது குறித்து விவசாயி மகாலிங்கம் (60) என்பவர் கூறுகையில், ‘யானைகளை பொறுத்தவரை மழையடிவார தோட்டங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 2 கி.மீ தூரம் சாலையை தாண்டி வருகிறது. விளைநிலங்களை சேதப்படுத்துகிறது. வனத்துறையினர் விரட்டும்போது வனப்பகுதிக்குள் செல்கிறது. பின்னர் மீண்டும் வந்து விளைநிலங்களில் முகாமிடுகிறது. வனத்துறையினரும் விடிய, விடிய பட்டாசு வெடித்து தீபாவளி போல யானைகளை விரட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

The post விடிய, விடிய பட்டாசு வெடித்து யானைகளை விரட்டுகின்றனர்; ‘தும்பிக்கையான்’களால் தூக்கம் தொலைக்கும் வனத்துறையினர்: திருவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputur ,Redwood Forest ,
× RELATED திருவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி...