×

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை விவகாரம்; மேலும் ஒரு புரோக்கர் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை விவகாரத்தில் டாக்டர் மற்றும் புரோக்கர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு புரோக்கர் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (29). இவரது மனைவி நாகதேவி (26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நாகதேவிக்கு கடந்த 7ம் ேததி 3வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தினேஷை செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், அவரது 3வது குழந்தையை ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக விற்றுத்தருவதாக கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த தினேஷ் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரித்து லோகாம்பாள் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் அனுராதா (39) என்பவரின் தூண்டுதலின்பேரில், தினேஷிடம் குழந்தையை விற்க வலியுறுத்தியதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் டாக்டர் அனுராதா, புரோக்கர் லோகாம்பாள் ஆகிய 2 பேரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், அனுராதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே பெண் டாக்டரின் 2 கிளினிக்கிற்கு திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர், சுகாதாரப்பணி இணை இயக்குநர் மேற்பார்வையில் சீல் வைக்கப் பட்டது. போலீசார் விசாரணையில் டாக்டர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் சேர்ந்து 7 குழந்தைகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குழந்தைகள் விற்பனையில் தொடர்புடைய குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி உள்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், திருச்சி, மதுரை, தென்காசி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் விற்பனை மற்றும் கிட்னி விற்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை விவகாரம்; மேலும் ஒரு புரோக்கர் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்