×

ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் களம் இறங்கியதால் திருப்பம்; காசாவுக்குள் இஸ்ரேல் நுழைந்தால் உலகப் போர்?: லெபனானின் ஹிஸ்புல்லா நிலைகள் மீது சரமாரி குண்டுவீச்சு

டெல் அவிவ்: ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் களம் இறங்கிய நிலையில், காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால் உலகப் போர் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் இஸ்ரேலின் தரைவழி தாக்குதலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் நாளை இஸ்ரேல் செல்கிறார். பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லை பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி லெபனானை ஒட்டிய இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் 28 நகரங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் கூறுகையில், ‘ஈரானின் தூண்டுதலின்பேரில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள், பீரங்கிகள் குவிக்கப்பட்டு உள்ளன. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் தாக்குதலை லெபனான் அரசு தரப்பு தாக்குதலாகவே கருதுகிறோம். லெபனானுடன் நாங்கள் போரிட விரும்பவில்லை. அதேநேரம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் லெபனானை அழித்துவிடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இஸ்ரேலுக்கு புதிய மிரட்டல் விடுத்துள்ள ஈரான், ராணுவ நடவடிக்கைக்காக காசா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால் உலகப்போர் ஏற்படும் என கூறியுள்ளது. இஸ்ரேலை தனது ராணுவ வீரர்களின் கல்லறையாக மாற்றுவோம் என்று ஈரான் கூறியுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர், கத்தாரில் ஹமாஸ் தளபதியை சந்தித்த பின்னர், இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இஸ்ரேல் படைகள் காசாவுக்குள் நுழைந்தால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் கூறியுள்ளது. ஈரானின் அச்சுறுத்தல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், ‘ஈரானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நாங்கள் கொடுக்கும் செய்தி என்னவென்றால், வடக்கு பிராந்தியத்தில் எங்களை சோதித்து பார்க்க வேண்டாம். உங்களது கடைசி தவறை மீண்டும் செய்யாதீர்கள். அதற்காக நீங்கள் செலுத்தும் விலை மிகவும் மோசமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் இஸ்ரேலிய ராணுவம் காசா மீது தரைவழி தாக்குதலை நடத்துவதற்காக எல்லையில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்களை குவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் நூற்றுக்கணக்கான மெர்காவா டாங்கிகள், காசாவை நோக்கி வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு பொத்தானை அழுத்தினால், காசா மீது குண்டுகள் மழை பொழியத் தொடங்கும் என்றும் கூறுகின்றனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இந்தப் போரின் சூடு தற்போது ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் வரையும் விரிவடைந்துள்ளது. ஆனால் காசா மீதான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஈரானின் அச்சுறுத்தல் இஸ்ரேல் பிரதமரை பாதிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

கடந்த 10 நாட்களில் 199 இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைய கைதிகளாக பிடித்து காசாவிற்கு அழைத்து சென்றனர். அவர்களை பத்திரமாக மீட்கும் யோசனையிலும் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இதற்கு காரணம், அங்குள்ள மக்கள் தங்களது நாட்டினரை பத்திரமாக மீட்க இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பின் பலத்தை அதிகரிக்க, ஹிஸ்புல்லாவுக்கு ஈரானுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. இஸ்ரேலின் கூற்றுப்படி, ஈரான் தனது ஆயுதங்களை சிரியாவுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. அதாவது இஸ்ரேலை ஒட்டிய நாடுகளை மட்டும் ஈரான் சந்திக்காமல், இஸ்ரேலுக்கு எதிரான மற்ற நாடுகளையும் ஒன்றிணைக்கிறது. இதன் மூலம் காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக ஈரான் தற்போது வெளிப்படையாக களமிறங்கியுள்ளது. இந்த போரில் ஈரான் நேரடியாக நுழைந்தால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே வலுவான போர் நடக்கும் என்கின்றனர். காசா பகுதியை கைப்பற்றுவதற்காக, இஸ்ரேல் ராணுவம் வான்வழி, தரைவழித் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காசா பகுதியைக் காப்பாற்ற ஈரான் தீவிரமாக முயன்று வருகிறது. லெபனான், சிரியா, கத்தார் போன்ற நாடுகளின் தலைவர்களை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அடுத்தடுத்து சந்தித்து வந்ததால், இஸ்ரேலில் போர் வியூகம் மாறுவதாக கூறுகின்றனர். இஸ்ரேலின் மத்தியதரைக் கடல் பகுதியில் அமெரிக்கா தனது போர்க்கப்பலை நிறுத்தியுள்ளது.

இஸ்ரேலை சுற்றிலும் பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஜோர்டன், துருக்கி, எகிப்து போன்ற நாடுகள் தங்களது எல்லைகளை பகிர்ந்துள்ளதால் இஸ்ரேலுக்கு எதிராக பல பக்கங்களிலும் இருந்தும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், அரபு நாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளதால், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க வேண்டும் என்று அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ‘காசா மீதான ராக்கெட் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால், ஹமாஸ் அமைப்பினர் அவர்களின் பிணையக்கைதிகளை விடுவிப்பார்கள்’ என்று கூறியுள்ளார். அதேநேரம் ஜெர்மன் வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் ஈரான் தலையிடக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக ரஷ்யாவும் களமிறங்கியுள்ளது. காசாவில் பொதுமக்கள் சாவதை ஏற்க முடியாது என்று ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். எப்படியாகிலும் இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் நுழைந்தால், உலகப் போர் தொடங்குவதற்கான நேரம் அதிகம் எடுக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதனால் காசா மீது தரைவழி தாக்குதலை நடத்துவதாக அறிவித்த இஸ்ரேல் தற்போது தயக்கம் காட்டி வருகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் – ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், நாளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்குச் செல்கிறார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், ‘இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கிறது. ஹமாஸ் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து தனது மக்களைப் பாதுகாக்கவும் எதிர்த் தாக்குதல்களை நடத்தவும் இஸ்ரேலுக்கு உரிமை உண்டு. இதுகுறித்து ஏற்கனவே அதிபர் ஜோ பிடன் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நெருக்கடியை சாதகமாக பயன்படுத்தி, இஸ்ரேல் மீது எவரும் தாக்குதல் நடத்தக் கூடாது. காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் அமெரிக்க தரப்பிலும் வழங்கப்படும்’ என்றார்.

 

The post ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் களம் இறங்கியதால் திருப்பம்; காசாவுக்குள் இஸ்ரேல் நுழைந்தால் உலகப் போர்?: லெபனானின் ஹிஸ்புல்லா நிலைகள் மீது சரமாரி குண்டுவீச்சு appeared first on Dinakaran.

Tags : Iran ,Hamas ,World War ,Israel ,Gaza ,Lebanon ,Hezbollah ,Tel Aviv ,World War if ,Saramari ,Dinakaran ,
× RELATED நள்ளிரவில் 300 ஏவுகணை, டிரோன்களை ஏவி...