×

காஞ்சியில் ஒரு அபிராமிபட்டர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

‘‘நகரேஷு காஞ்சி’’ என்று வடநாட்டுப் புலவரான காளிதாசன், தமிழ்நாட்டு திருப்பதியான காஞ்சிப் பெரும்பதியை பாடி இருக்கிறார். அப்படியென்றால் அந்த நகரத்தின் பெருமை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்! சைவ பஞ்ச பூத தலங்களில் பூமித் தலமாகவும், முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாகவும் விளங்கும் இந்த நகரத்தின் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். ஜகன் மாதாவான காமாட்சி தேவி அருளாட்சி செய்யும் அற்புதமான நகரம், இதில் அவள் நிகழ்த்திய அதிசயங்கள் ஏராளம்! அன்னை அவளின் அற்புத லீலையால் மலர்ந்த ஒரு அதிசயத்தை இப்போது பார்க்கலாம் வாருங்கள்.

சில நூறு வருடங்களுக்கு முன்னால், பூனா ராஜ்ஜியத்தை, சந்திர சேகர பூபாலன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மைதிலோட்ரம் என்று அவன் ராஜ்ஜியத்திற்க்கு பெயர். அவனது அரசவையில் ஸ்ரீநிவாச தீக்ஷிதர் என்ற மகான், அங்கம் வகித்து வந்தார். அவர் பெரிய அம்பிகை உபாசகர் ஆவார். நித்தமும் அம்பிகையின் மூலமந்திரத்தை ஜபித்த படியே இருந்து, அம்பிகையின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். இதனால், அரசனுக்கும் அவர் மீது ஒரு தனி மரியாதை உண்டு.

இது இப்படி இருக்க, ஒரு நாள் அரசவையில் அரசன், ஸ்ரீநிவாச தீக்ஷிதரைப் பார்த்து ‘‘இன்று என்ன திதி?’’ என்று வினவினான். மன்னனின் இந்த கேள்வியை சற்றும் எதிர் பாராத தீக்ஷிதர், தன்னையும் அறியாமல், ‘‘இன்று பூரண பௌர்ணமி’’ என்று சொல்லிவிட்டார்.தீக்ஷிதரின் இந்தக் கூற்றை கேட்டு அரசவையே நகைத்தது. அதற்கு, காரணம் இல்லாமல் இல்லை. நிறைந்த அமாவாசையை பூரண பௌர்ணமி என்று, நன்கு கற்று அறிந்த பண்டிதர் சொன்னால், யாருக்குதான் சிரிப்பு வராது?

அரசவையின் நகைப்புக்கு ஆளான தீக்ஷிதர், அவமானத்தால் புழுங்கினார். அடடா! என்ன இது? இப்படி ஒரு அற்பமான பதில் சொல்லிவிட்டோமே! என்று எண்ணிய படி, தீக்ஷிதர் கண்களை மூடினார். அவரது இதயத்தில் இனிமையாக நகைத்த படி காமாட்சி அருள் காட்சி தந்தாள். அவளது மதிமுகத்தை தரிசித்ததால் வந்த தைரியத்தில், ‘‘இன்று சந்திரன் வந்தே தீரும். இது என் அன்னை காமாட்சியின் மீது ஆணை!’’ என்று சபதம் செய்துவிட்டு, அவமானம் தாங்காமல் அரசவையை விட்டு வெளியேறினார்.

வீட்டிற்கு வந்தவர் காமாட்சியை மனதால் வணங்கிய படியே, சாயங்கால வேளைக்கான சந்தியா வந்தனத்தை செய்ய ஆரம்பித்தார். (சந்தியா வந்தனம் என்பது, காலை, மாலை, மற்றும் மதிய வேளைகளில், அந்தணர்கள் செய்யும் ஒரு வித வழிபாடு) சந்தியா வந்தனத்தின் ஒரு அங்கமாக சூரியனை பார்த்த படி அர்க்கியம் (தீர்த்தம்) விடுவது வழக்கம். அந்த செயலை செய்யும் போது அன்னை காமாட்சியை மனதார சரணாகதி செய்தபடி, காயத்ரி மந்திரம் சொல்லி, தீக்ஷிதர் அர்க்கியம் விட்டார்.

தீக்ஷிதரின், நிலையை உணர்த்த அம்பிகையின் தாயுள்ளம் கனிந்தது. மின்னல் கொடி போன்ற வடிவொடுத அம்பிகை, தீக்ஷிதருக்கு காட்சி தந்தாள். ‘‘குழந்தாய் வருத்தம் வேண்டாம். இதோ என் தோட்டை, எடுத்துக்கொள். இதை வானத்தில் வீசி எறி. உன் கவலை எல்லாம் தீரும். ஆசிகள்’’ என்று அமுதமாக ஆசிமொழிகள் கூறி, தனது தோட்டையும், தீக்ஷிதர் கையில் தந்துவிட்டு அம்பிகை மறைந்து அருளினாள். அம்பிகையின் தோட்டை மகா பிரசாதமாக எண்ணி கண்களில் ஒற்றிக் கொண்டு, விண்ணில் வீசி எறிந்தார் தீக்ஷிதர். தீக்ஷிதர் விண்ணில் தோட்டை வீசியதுதான் தாமதம். ஆகாயத்தில் நொடியில் பூரண சந்திரன் தோன்றி தன் அமுத கிரணங்களை பொழிந்தான்.

இந்த அதிசயத்தை கண்ட, மன்னன் ஓடோடி வந்து அவரது காலில் விழுந்து, ஆசிபெற்றான். அவையில் இருந்த அனைவரும் ஒரு மகானை எள்ளி நகையாடிவிட்டோமே என்று தலை குனிந்தார்கள். மன்னன், தீக்ஷிதரை பாராட்டி அவருக்கு `ரத்னகேடம்’ என்ற ஆபரணம் பூட்டி, சுவர்னாபிஷேகம் செய்தான். அன்று முதல் நிவாச தீக்ஷிதர், `ரத்னகேட தீக்ஷிதர்’ என்று அழைக்கப் படலானார்.ஒரு முறை, இந்த ரத்ன கேட தீக்ஷிதர், அப்பைய தீக்ஷிதர் என்ற வேறொரு மகானை வாதத்தில் வெல்ல வேண்டும் என்று காமாட்சியை சரணாகதி செய்தார். அவரது தியானத்தில் தோன்றினாள் அம்பிகை. ‘‘‘அப்பைய தீக்ஷிதர், சாக்ஷாத் அந்த பரமேஸ்வரனின் அவதாரம். என் கணவனின் அவதாரத்தை வெல்ல நானே எப்படி உதவுவது?’’ என்று ரத்னகேட தீக்ஷிதரை அம்பிகை வினவினாள். பிறகு அவளே ஒரு யோசனையும் சொன்னாள். ‘‘அப்பனே! உனக்கு மங்களாம்பிகை என்று ஒரு பெண் இருக்கிறாள்.

அவளை அப்பைய தீக்ஷிதருக்கு மணமுடித்துவை. இப்படி செய்வதால் அவனுக்கு நீ மாமனார் முறையாக ஆகிவிடுவாய். சாஸ்திரத்தின் படி, மாமனார் ஒருவனுக்கு குரு என்பதால், அப்பைய தீக்ஷிதர் உன்னை குருவாக வணங்குவார். நீ ஆசை பட்டது நிறைவேறும்’’ என்று ஒரு அற்புதமான யோசனையை அம்பிகை சொன்னாள்.‘‘ஆனால் தாயே, யார் அப்பைய தீக்ஷிதரிடம் சென்று சம்பந்தம் பேசுவது? அவ்வளவு பெரிய மகானை சென்று எப்படி நான் சம்பந்தம் பேசுவேன்?’’ என்று ரத்ன கேட தீக்ஷிதர் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

அதை கேட்ட அம்பிகை, இள நகை பூத்தாள். ‘‘சம்பந்தம் பேசும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விடு! இப்போது நிம்மதியாக என்னை தியானம் செய்’’ என்று அமுதமாக சொல்லி அருளினாள். அம்பிகை, தான் கொடுத்த வாக்கின் படியே, அப்பைய தீக்ஷிதர் கனவிலும், நாட்டு மன்னன் கனவிலும், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் அர்ச்சகர் கனவிலும் சென்று சம்பந்தம் பேசி முடித்தாள் என்பது, காஞ்சி புராணத்தில் பொன் ஏட்டில் பதிக்க வேண்டிய விஷயம்.

தை அமாவாசை அன்று அபிராமி பட்டருக்காக நிலவை வர வைத்த அபிராமியின் கதை நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் காஞ்சி காமாட்சியின் இந்த லீலை, அதையும் மிஞ்சி விட்டது என்று தான் கூற வேண்டும். நம்பியவரை என்றும் கைவிடாத காஞ்சி காமாட்சியை போற்றி நற்கதி பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post காஞ்சியில் ஒரு அபிராமிபட்டர் appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Kungumum Anmikam ,Kalidasan ,Tamil Nadu ,Tirupati ,Kanji ,
× RELATED மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி