×

உலக கோப்பையில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றி; விமர்சனங்களுக்கு காது கொடுக்க போவதில்லை: ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

லக்னோ: உலக கோப்பை கிரிக்கெட் இலங்கை அணிக்கு எதிராக நேற்று லக்னோவில் நடந்த 14வது லீக் போட்டியில்ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இந்த தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து ஆஸி. பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இதையடுத்து கட்டாய வெற்றி என்ற நிலையில் நேற்று ஆஸி. களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியை 209 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்கியது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறினாலும், 35.2 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய இங்லிஸ் 58 ரன்களும், மிட்செல் மார்ஷ் 52 ரன்களும் விளாசினர். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை ஆஸ்திரேலிய அணி பதிவு செய்துள்ளது.

புள்ளிப் பட்டியலிலும் ஆஸ்திரேலியா 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வெற்றி குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், கடந்த 2 போட்டிகளில் தோல்வியடைந்தபோது நான் பெரிதாக எதையும் கூறவில்லை. இன்றைய ஆட்டத்தில் எங்கள் வீரர்களின் எனர்ஜியை பார்க்க அற்புதமாக இருந்தது. இலங்கை அணியினர் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார்கள். ஆனால் நாங்கள் நல்லவிதமாக பந்துவீசினோம் என்றே நினைக்கிறேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்வதற்கு கடினமான லெந்தில் தொடர்ந்து பந்துவீசினார்கள். இந்த ஆடுகளத்தில் 300 ரன்கள் என்பது சவாலானதாக இருந்திருக்கும். எங்களை ஏராளமானோர் தீவிரமாக பார்க்கிறார்கள் என்பதை அறிவோம். எங்களை பற்றி வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு காது கொடுக்க போவதில்லை. இன்றைய ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டோம். இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்’’ என்றார்.

பேட்டிங்கில் தவறு செய்துவிட்டோம் இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா காயம் காரணமாக விளையாடாததால் தற்காலிக கேப்டனாக குசல் மெண்டிஸ் களமிறங்கினார். தோல்விக்கு பின் அவர் கூறுகையில், “எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தும், நடுவில் நாங்கள் தடுமாறினோம். இன்றைய ஆட்டத்தில் 300 ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொண்டிருப்போம். ஏனென்றால் 300 ரன்கள் இருந்தால்தான் இந்த ஆடுகளத்தில் வெற்றிபெற முடியும். எங்களது பேட்டிங்கில் நாங்கள் சிங்கிள்ஸ் அதிகமாக எடுக்காமல் தவறு செய்து விட்டோம். பல பந்துகளை வீணடித்து விட்டோம். கடந்த 2 போட்டிகளில் எங்கள் பேட்ஸ்மேன்கள் நன்றாக தான் விளையாடினார்கள். ஆனால் இன்று கொஞ்சம் தடுமாறினார்கள். இன்னும் எங்களுக்கு 6 போட்டிகள் இருக்கிறது. அதில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதுசங்கா சிறப்பாகவே பந்துவீசி தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது நம்பிக்கைக்கு உரியதாக இருந்தது. எங்கள் கேப்டன் ஷனாகா மீண்டு வருவார் என நம்புகிறேன்’’ என்றார்.

 

The post உலக கோப்பையில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றி; விமர்சனங்களுக்கு காது கொடுக்க போவதில்லை: ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : First World Cup ,Sri Lanka ,Captain Cummins ,Lucknow ,Cricket World Cup ,Lucknow.… ,World Cup ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...