×

இலங்கை கடற்படையை கண்டித்து நடக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல், ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தும் காலவரையற்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் ரஃபீக் அகமது வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடற்படையின் அத்துமீறல் நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் 27 பேரை எல்லை தாண்டியதாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளதோடு, அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறலை ஒன்றிய அரசு தடுக்கத் தவறியதே தொடரும் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.

இந்நிலையில், இலங்கை கடற்படையின் அத்துமீறலை ஒன்றிய, மாநில அரசுகள் தடுக்கக் கோரியும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு அளிக்கின்றது. மேலும், அக்.18 அன்று இதுதொடர்பாக நடைபெறும் ஜனநாயக வழி போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ. மீனவர் அணி கலந்துகொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post இலங்கை கடற்படையை கண்டித்து நடக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lanka Navy ,STBI ,Chennai ,Tamil Nadu ,STPI ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...