×

இனிய வாழ்வளிக்கும் இலஞ்சி குமரன்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது இலஞ்சி கிராமம். இத்தலத்தில் இலஞ்சி குமரன் வள்ளி – தெய்வானையுடன் திருக்கோயில் கொண்டுள்ளார். இங்கிருந்து திருக்குற்றாலம் சுமார் 3.கி.மீ. தூரத்தில் உள்ளது. திருக்குற்றாலத்துக்கும் இலஞ்சிக்குமிடையில் சித்திரா நதியும் ஐந்தருவியாறும் சேருமிடத்தில் கிழக்கே சோலையும் வயல்களும் சூழ்ந்த இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. `சித்திரா நதி’ ஆலயத்தை சுற்றி வலம் வருகிறது.

அகத்தியர் பூஜை செய்ததும் அருணகிரிநாதரால் பாடப் பெற்றதுமான வரலாற்றுச் சிறப்புடையது இந்த இலஞ்சி குமாரர் ஆலயம். காஸ்யப, கபில, துர்வாச முனிவர்கள் மூவரும் திரிகூடாசல மலையின் வடகீழ்த்திசையில் ஒருவரையொருவர் சந்தித்து பல தத்துவப் பொருட்களின் நுணுக்கங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இவ்வுலகம் `உள் பொருளா இல் பொருளா’ என்ற வினாவும், `மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர்’ என்ற வினாவும் எழுந்தன. அப்போது அம்மூவரும் உண்மை விளங்க முருகக் கடவுளை வணங்கினர்.

வலக்கரங்களில் வேலும், வரத முத்திரையும் இடக்கரங்களில் அபய முத்திரையும், சேவல் கொடியுமாக அவர்களுக்குக் காட்சியளித்து அவர்களது ஐயப்பாட்டை தீர்த்தருளினாராம் முருகன். ஐயம் தீர்ந்த அம்முனிவர்களின் வேண்டுகோளின்படி குமரக்கடவுள் இத்தலத்தில் எழுந்தருளி வேண்டிய வரங்களை பக்தர்களுக்கு வழங்கலானார். அன்று முதல் இவர் `வரதராஜகுமாரர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

மிகவும் பழமையான இந்த திருத்தலத்தை அருணகிரிநாதர் திருப்புகழில் ‘இலஞ்சியிலமர்ந்த பெருமானே’ என்றும், ‘இலஞ்சி விசாகப் பெருமானே’ என்றும் பாடிப் பரவியுள்ளார். இத்திருத்தலம் திருக்குற்றாலத்துடன் தொடர்புடையது. தென்னிலஞ்சி, பொன்னிலஞ்சி, மலரிலஞ்சி, திருவிலஞ்சி என்றெல்லாமும் வழங்கப்படும் இத்திருத்தலத்தில் கந்த சஷ்டி விழா தேர்த்திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.

இந்தத் திருநாளில் முதல் நாள் அயனாகவும், இரண்டாம் நாள் அரியாகவும், மூன்றாம் நாள் அரனாகவும், நான்காம் நாள் மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் சதாசிவனாகவும், ஆறாம் நாள் வெள்ளி மயிலேறி சூரசம்ஹாரம் செய்யும் முருகனாகவும் அழகுக் காட்சியளிக்கிறார். ஏழாம் நாள் திருத்தேர் நடைபெறுகிறது. இந்த கந்த சஷ்டி விழாவை, திரிகூடராசப்பக் கவிராயர் தமது திருக்குற்றால குறவஞ்சியில் பாடியிருக்கின்றார்.

மகிழ மரம் இங்கு தல மரம். செண்பக மலர் சிறப்பு புஷ்பம். குற்றாலத்தில் நடக்கும் சித்திரை, ஐப்பசி விஷு திருவிழாக்களுக்கு இலஞ்சி குமரன் வள்ளி தெய்வானையுடன் கொடியேற்ற நாளில் சென்று 10 நாட்கள் பவனி வந்து அங்கு தீர்த்தவாரி முடிந்ததும் இலஞ்சிக்கு திரும்புகிறார். அங்கிருந்து இவர்கள் பிரியும்போது மேளதாளத்துடன் மக்கள்கூடி வழியனுப்புவது மனதை உருக்கும். கண்களில் நீர் தளும்பும். தை மாத தெப்ப உற்சவத்திலும் இந்த இலஞ்சி குமரன் விழா காண குற்றாலம் செல்கிறார்.

கி.பி. 1409-ல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இக்கோயிலை பழுதுபார்த்திருப்பதாக கல்வெட்டு தகவல் தருகிறது. அதன் பிறகு 1951-ம் ஆண்டுக்குப் பிறகுதான் பக்தர்கள் கோபுரம் எழுப்பி, சுதை வேலைப் பாடுகளையும் விஸ்வரூப தரிசனத்தையும் அமைத்துள்ளனர். கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், சரவண மண்டபம் எனப்படும் வெளி மண்டபத்துடன் கூடிய சம்பிரதாயமான ஆலயம் இது.

கிழக்கு திசை பார்த்த இந்த ஆலயத்தில் தென்பக்கம் `இலஞ்சி குமரன்’ கொலுவிருக்க, வலப்பக்கம் `இருவாலுக நாயகர்’ என்ற சிவலிங்கப் பெருமான் ஸ்ரீ இருவாலுக ஈசர்க்கினியாளுடன் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தை ஆதியில் அகத்திய முனிவர் ஸ்தாபித்ததாக கூறப்படுகிறது. இறைவன், குமாரர் இருவர் சந்நதிகளுக்கு முன்னால் நந்தி, மயில் மற்றும் தனித்தனி கொடி மரங்களும் உள்ளன. இத்தலத்து முருகக் கடவுளை வழிபட்டு ஈசனை பிரதிஷ்டை செய்தபின் குற்றாலத்துக்குச் சென்று திருமாலை சிவனாக உருமாற்றி அகத்தியர் வழிபட்டு வந்ததாக வரலாறு உள்ளது.

தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள இத்தலத்திற்கு தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

The post இனிய வாழ்வளிக்கும் இலஞ்சி குமரன் appeared first on Dinakaran.

Tags : Lanjhi Kumaran ,Tirunelveli district ,Lanchi ,Llanchi ,Kumaran Valli ,Laranji Kumaran ,
× RELATED தீவினைகள் களையும் ஸ்ரீ பிரணவேஸ்வரர்