×

போருக்கு நடுவே.. அமெரிக்க அதிபர் ஜோபிடன் நாளை இஸ்ரேல் பயணம்…காசாவில் மனிதாபிமான உதவிகள் வழங்க ஒப்புதல்!!

வாஷிங்டன் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான மோதல் பெரும் பிராந்திய போராக விரிவடையும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபிடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஹமாஸ் இயக்கத்தை வேரறுக்கப் போவதாக உறுதி பூண்டுள்ள இஸ்ரேல், காசா பகுதிகளில் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. மேலும் வடக்கு காசா பகுதிகளில் தரைவழி தாக்குதலுக்கும் தயார் ஆகி வருகிறது. இஸ்ரேல் துருப்புகள் காசா முனை எல்லையில் தயார் நிலையில் உள்ளதால் எந்நேரமும் தரைவழித் தாக்குதல்கள் தொடங்கப்படலாம் என்ற உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென், தனது நட்பு நாடுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் அமெரிக்க அதிபர் ஜோபிடன், நாளை இஸ்ரேல் விஜயம் செய்ய இருப்பதாக கூறினார்.மேலும் அவர் பேசியதாவது, “அமெரிக்க அதிபர் ஜோபிடன் புதன் கிழமை இஸ்ரேலுக்கு செல்ல உள்ளார். இஸ்ரேலுக்கும் பிராந்தியத்திற்கும் முக்கியமான தருணத்தில் அவர் வருகிறார். இஸ்ரேலுடனான அமெரிக்காவின் ஒற்றுமையை அதிபர் பிடன் மீண்டும் உறுதிப்படுத்திவார்.30 அமெரிக்கர்கள் உட்பட 1,400க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் படுகொலை செய்துள்ளது. எனவே இஸ்ரேலுக்கு, ஹமாஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கவும் எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும் உரிமையும் கடமையும் உள்ளது. இதனை பிடன் மீண்டும் தெளிவுபடுத்துவார்.

ஹமாஸ் இயக்கத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட பிணைய கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசின் உதவியுடன் அமெரிக்க அதிபர் ஒருங்கிணைப்பார்,”என்று கூறினார். இதனிடையே இஸ்ரேல் பயணத்தின் போது பாலஸ்தீனம், எகிப்து அதிபர்களையும், ஜோர்டன் மன்னர் அப்துல்லா ஆகியோரையும் பிடன் சந்திக்க உள்ளார். மேலும் போரால் உருக்குலைந்துள்ள காசாவில் மனிதாபிமான உதவிகள் வழங்க அமெரிக்கா – இஸ்ரேல் ஒப்புதல் வழங்கி உள்ளது. காசாவிற்குள் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது குறித்து அமெரிக்கா – இஸ்ரேல் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுப்ப ஒப்புக்கொண்ட இஸ்ரேல் நிலைப்பாட்டை வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் தகவல் அளித்துள்ளார்.

The post போருக்கு நடுவே.. அமெரிக்க அதிபர் ஜோபிடன் நாளை இஸ்ரேல் பயணம்…காசாவில் மனிதாபிமான உதவிகள் வழங்க ஒப்புதல்!! appeared first on Dinakaran.

Tags : US PRESIDENT ,JOBIDEN ,ISRAEL ,Washington ,Hamas ,Dinakaran ,
× RELATED நீடிக்கும் இஸ்ரேல் – காசா போர்;...