×

பைக் மீது கார் மோதியதில் கணவன், மனைவி, குழந்தை பலி: இசிஆரில் பரிதாபம்

சென்னை, அக்.17: திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (31). கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பவித்ரா (27). தம்பதியின் மகன் நவ்னீத் (2). கடந்த வாரம் பவித்ரா தனது குழந்தையுடன் சென்னை கொசப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று காலை, இருவரையும் அழைத்து வருவதற்காக தனசேகரன் தனது பைக்கில் சென்னை சென்றார். காலை 11 மணியளவில், கொசப்பேட்டையில் இருந்து பைக்கில் புறப்பட்டு மூவரும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருக்கழுக்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

முட்டுக்காடு படகுத்துறையை தாண்டி கோவளம் அருகே குன்றுக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து வேகமாக வந்த சொகுசு கார், பைக் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த தனசேகரன் மற்றும் பவித்ரா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தை நவ்னீத்தை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தையும் உயிரிழந்தது.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சொகுசு காரை ஓட்டிவந்த ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியை சேர்ந்த வினய் (45) என்பவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து அறிய மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 திருவொற்றியூர் பல்லவன் தர்கா தெருவை சேர்ந்த இப்ராஹிம் (40), நேற்று கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, திருவொற்றியூரில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த மாநகர பேருந்து (தடம் எண் 157) அவர் மீது மோதியதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இப்ராஹிம் பலியானார். தகவலறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார், இப்ராஹிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 தண்டையார்பேட்டையை சேர்ந்த குப்பு (35), திருவொற்றியூரை சேர்ந்த வெங்கடேன் (42) ஆகியோர், நேற்று திருமங்கலம் 100 அடி சாலையில் பைக்கில் சென்றபோது, லாரி மோதியதால், கீழே விழுந்தனர். அப்போது, குப்பு தலைமீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த வெங்கடேசன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post பைக் மீது கார் மோதியதில் கணவன், மனைவி, குழந்தை பலி: இசிஆரில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : ECR ,Chennai ,Danasekaran ,Nerumpur ,Kalpakkam nuclear power plant ,
× RELATED கல்பாக்கம் அருகே இசிஆர் சாலை...