×

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா பேனர் கிழிப்பு தொல்லியல்துறை கெடுபிடி வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை

வேலூர், அக்.17: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் நவராத்திரி உற்சவ கலை நிகழ்ச்சி பேனரை கிழித்ததுடன், நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று தொல்லியல்துறை காட்டிய கெடுபிடி பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை வளாகம் முழுவதும் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதேநேரத்தில் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மட்டும் ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் அன்றாட பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இதில் நவராத்திரி உற்சவ பேனர்கள் ஜலகண்டேஸ்வரர் கோயில் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் தென்கிழக்கில் உள்ள நாயன்மார்கள் வரிசையை ஒட்டிய காலியிடத்தில் வைக்கப்படுவதுடன், அங்கு நவராத்திரியின் 9 நாட்களும் அந்தந்த நாட்களுக்கு உரிய அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பரதநாட்டியம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் கோட்டை நுழைவு பகுதியில் காந்தி சிலை அருகிலும் கோயில் சார்பில் பேனர் வைக்கப்படுகிறது.

கருவறையில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயிலில் மீண்டும் வழிபாடுகள் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேல் மேற்கண்ட உற்சவங்கள், விழாக்கள் நடத்தப்படுகிறது. அதற்கான பேனர்களும் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென உள்ளே நுழைந்த வேலூர் கோட்டை முதுநிலை பராமரிப்பு அலுவலர் அகல்யா, தொல்லியல்துறை பணியாளர்களுடன் வந்து பேனர்களை கிழித்ததுடன், தொல்லியல் துறை அனுமதியின்றி எப்படி பேனர் வைக்கலாம்? என்று கேட்டு பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என்று தடுத்து நிறுத்தினாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபனத்தினர் மற்றும் பக்தர்கள் சென்னையில் உள்ள தொல்லியல்துறையை அணுகினர். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் மட்டும் நடத்த அனுமதி கிடைத்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து அங்கு மேடையின்றி பள்ளிக்குழந்தைகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. திடீரென்று நடந்த இந்த நிகழ்வு அங்கு சாமி கும்பிட வந்திருந்த பக்தர்களை கடுமையான மனவேதனைக்கு ஆளாக்கியது.
இதுதொடர்பாக பக்தர்களிடம் கேட்டபோது, ‘காலம் காலமாக நடந்து வரும் இந்த நடைமுறையை திடீரென அனுமதி பெறவில்லை என்று கூறி தடுத்து நிறுத்துவதுடன், சாமி படங்கள் உள்ள பேனர்களை கிழித்து போட்டது தவறானது’ என்று கூறினர்.

இதுகுறித்து வேலூர் கோட்டை முதுநிலை பராமரிப்பு அலுவலர் அகல்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘இது காலம், காலமாக நடந்து வரும் விழா என்றாலும், கோட்டை வளாகம் முழுவதுமே தொல்லியல்துறை கட்டுப்பாட்டிற்கும், தொல்லியல் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டது. ஏற்கனவே தங்கத்தேர் விஷயத்தில் இதுவரை தொல்லியல் துறையின் டெல்லி தலைமையிடம் பதில் சொல்லி வருகிறோம். எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், தொல்லியல்துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். காலையில் இதுதொடர்பாக தரும ஸ்தாபன நிர்வாகிகளிடம் கேட்டதற்கு அவர்கள் முறையாக பதில் சொல்லவில்லை. அதனால் வடக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அனுமதி கேட்டு கடிதம் வழங்கினர். உடனே அனுமதி வழங்கப்பட்டது. யாரும் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. முறையாக அனுமதி கேட்க வேண்டும் என்கிறோம்’ என்றார்.

The post ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா பேனர் கிழிப்பு தொல்லியல்துறை கெடுபிடி வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை appeared first on Dinakaran.

Tags : Navratri ,Jalakandeswarar Temple Archeology Damaging Historic ,Vellore Fort ,Vellore ,Fort Jalakandeswarar Temple ,Navratri festival ,
× RELATED காட்பாடியில் ₹365 கோடி நிதியில் ரயில்...