×

₹4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது பேரணாம்பட்டு அருகே பரபரப்பு மாவு மில்லிற்கு மின்இணைப்பு வழங்க

பேரணாம்பட்டு, அக்.17: பேரணாம்பட்டு அருகே மாவு மில்லிற்கு மின்இணைப்பு வழங்க ₹4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா(56), விவசாயி. இவர் தனது மாவு மில்லிற்கு சிறு, குறு தொழில் நிறுவனத்திற்கான மின் இணைப்பு வழங்கக்கோரி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மேல்பட்டியில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தாராம். ஆனால், அப்போது இருந்த அதிகாரிகள் மின்இணைப்பு வழங்காமல் அலைக்கழித்து வந்தார்களாம்.

தொடர்ந்து, புதிதாக வந்த வணிக ஆய்வாளர் மதன்(48) என்பவரிடம் சென்று விவசாயி சிவா கேட்டபோது, உங்களது விண்ணப்பம் காணவில்லை. மீண்டும் விண்ணப்பம் செய்யுங்கள் என கூறினாராம். அதன்பேரில், கடந்த மாதம் 21ம் தேதி மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். மேலும், மின்இணைப்பு எப்போது கிடைக்கும் என வணிக ஆய்வாளரிடம் கேட்டபோது ₹5 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறினாராம். ஆனால், லஞ்சம் எதுவும் கொடுக்க விரும்பாத சிவா இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ₹4 ஆயிரத்தை எடுத்து கொண்டு நேற்று மேல்பட்டி மின்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்ற சிவா, அதனை வணிக ஆய்வாளர் மதனிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார், லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து வணிக ஆய்வாளர் மதனை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சிக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post ₹4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது பேரணாம்பட்டு அருகே பரபரப்பு மாவு மில்லிற்கு மின்இணைப்பு வழங்க appeared first on Dinakaran.

Tags : Senshu ,Peranampattu ,Peranampatu ,
× RELATED இழப்பீடு கேட்டு சடலத்துடன்...