×

மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டு கலெக்டர் திடீர் ஆய்வு சூடாகவும், சுவையாகவும் வழங்க அறிவுறுத்தல் திருவண்ணாமலை அரசு பள்ளிகளில்

திருவண்ணாமலை, அக்.17: திருவண்ணாமலை பகுதியில் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதையொட்டி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு சூடாகவும், சுவையாகவும் சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில், 1,581 பள்ளிகளில் 88,988 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அதற்காக, மாவட்டம் முழுவதும் 2,270 சமையல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், காலை உணவு முறையாக வழங்கப்படுகிறதா என தினமும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், காலை உணவுத்திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு, முதற்கட்டமாக 75,650 புதிய எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், உடையானந்தல் மற்றும் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் செட்டிப்பட்டு கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் நேற்று காலை உணவு திட்டத்தை கலெக்டர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, காலை உணவை மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் சாப்பிட்டார். அதைத்தொடர்ந்து, காலை உணவு சமைக்கும் சமையல் அறைகளை அவர் பார்வையிட்டார். சமையல் அறைகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.

சமையல் பணியில் ஈடுபடும் மகளிர் குழுவினர், சூடாகவும், மாணவர்கள் விரும்பும் வகையில் சுவையாகவும் சமைத்து ஆசிரியர்களின் நேரடி மேற்பார்வையில் உணவு வழங்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை உணவு வழங்கும் நேரத்தில், ஏதேனும் ஒரு ஆசிரியர் சுழற்சிமுறையில் பள்ளிக்கு முன்கூட்டியே வந்திருந்து, மாணவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார். ஆய்வின்போது, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, திருவண்ணாமலை ஒன்றிய குழுத்தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் த.ரமணன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சையத்சுலைமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டு கலெக்டர் திடீர் ஆய்வு சூடாகவும், சுவையாகவும் வழங்க அறிவுறுத்தல் திருவண்ணாமலை அரசு பள்ளிகளில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Government Schools ,Tiruvannamalai ,Collector ,Murugesh ,Tiruvannamalai government ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...