×

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தமிழ்நாட்டில் கடந்த 6 மாதத்தில் 33,000 குடியிருப்புகள் ஒதுக்கீடு: சென்னையில் மட்டும் 2,286 மக்கள் பயன் பெற்றனர்,வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: ‘‘தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் 44,457 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களில் 33,434 குடியிருப்புகள் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வாழ்விட மேம்பாட்டினை ஏற்படுத்த 1970ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2021ல் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றப்பட்டது.

இந்நிலையில், நகரங்களில் பொருளாதார நடிவடிக்கைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்திற்காக வேலை வாய்ப்பைத் தேடி நகரங்களுக்கு புலம்பெயர்கின்றனர். நகரமயமாதல், பொருளாதார மேம்பாட்டினை எளித்தாக்கினும், துரித நகரமயமாதலின் காரணமாக குடிசைப்பகுதிகள் பெருகி சமூக, கொள்கை அளவிலான சவால்கள் ஏற்படுத்துகின்றன. அதன்படி தமிழ்நாடு நகரமயமாக்கப்பட்ட முதன்மை மாநிலங்களில் ஒன்றாகும். அதேபோல் 2023ம் ஆண்டு முடிவுக்குள் தமிழ்நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகையானது 60 சதவிகிதத்தை எட்டும். மேலும் 2031ம் ஆண்டில் 67 சதவிகிதமாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நகரமயமாதலின் காரணமாக நகர ஏழை மக்கள், துயரமான சமூகப் பொருளாதார நிலையில் வாழ்கின்றனர். எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு குடிசைப்பகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் திறனுக்கேற்ற வீட்டு வசதி வழங்கல் போன்றவற்றை அதிகரிக்க அரசு முடிவுசெய்து நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனிடையே கடந்த 6 மாதங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் புதிதாக 44,457 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 33,434 குடியிருப்புகள் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 11,023 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில் : சாலையின் ஓரங்கள், நதிக்கரைகள் மற்றும் பொதுத் திட்டப்பணிகளுக்கு தேவைப்படும் இடங்கள் போன்ற பகுதிகளில் வாழும் நகர ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களது வாழ்விடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட இயலாது. இவ்வாறான குடும்பங்களுக்கு மறுகுடியமர்வு செய்ய அருகில் உள்ள காலி நிலங்களில் மின்தூக்கி, குடிநீர் வசதி, கழிவுநீரகற்று வசதி, சமூக வசதிகளான பள்ளிகள், நூலகம், பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒருங்கிணைந்த நகரங்களாக மேம்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் இதுவரை 4.86 லட்சத்துக்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் சென்னை மற்றும் பிற நகரங்களில் கட்டுப்பட்டுள்ளன. மேலும் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1.31 லட்சம் குடும்பங்களுக்கு மேம்படுத்தப்பட்ட மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 393 அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் கட்டுப்பட்டுள்ள 1,78,714 அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றுள், சென்னையில் 203 திட்டப்பகுதிகளில் 1,14,158 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் மற்றும் இதர நகரங்களில் 190 திட்டப்பகுதிகளில் 64,556 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உள்ளன.

மேலும் கடந்த 6 மாதங்களில் மட்டும் வாரியத்தின் மூலம் 44,457 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 33,434 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11,023 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட வேண்டிய குடியிருப்புகள் ஆகும். அதேபோல் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 29,608 குடும்பங்களுக்கு அதாவது 89 சதவீதம் குடியமர்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 சதவிதமான 3,826 குடியிருப்புகளுக்கு குடியமர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. சென்னையில் 2286 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட வேண்டியுள்ளது. அதேபோல் 874 குடியிருப்புகளில் குடியமர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு கூறினார்.

The post நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தமிழ்நாட்டில் கடந்த 6 மாதத்தில் 33,000 குடியிருப்புகள் ஒதுக்கீடு: சென்னையில் மட்டும் 2,286 மக்கள் பயன் பெற்றனர்,வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Urban Habitat Development Board ,Chennai ,Tamil Nadu Urban Development Board ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...