×

கட்டப்படாத மதுரை எய்ம்ஸ்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி!

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் கட்ட 36 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்படும் எனக் கூறிவிட்டு இதுவரை கட்டட பணியை முடிக்காதது ஏன் என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி பணியை துரிதப்படுத்த உத்தரவிடக்கோரி 2019ம் ஆண்டு ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மனு விசாரணைக்கு வந்த போது, 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என ஒன்றிய அரசு தெரிவித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தற்போது வரை தொடங்கப்படாததால் ஒன்றிய அரசின் முதன்மைச் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு முடிவு செய்வது இறுதி கட்ட நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 36 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்பட்டும் இன்று வரை கட்டி முடிக்காதது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு தரப்பில் கொரோனா காலத்தில் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை எனக் கூறப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மனுதாரர் கூறியதை பதிவு செய்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

The post கட்டப்படாத மதுரை எய்ம்ஸ்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி! appeared first on Dinakaran.

Tags : Madurai ,ICOURT BRANCH ,SARAMARI ,UNION STATE ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...