×

இறால் முட்டை மசாலா

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 2 (நறுக்கியது)
உப்பு – 3/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
இறால் – 250 கிராம்
முட்டை – 3
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து, 1 நிமிடம் வதக்கி, பின்பு வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அடுத்து கழுவி வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு மசாலாவுடன் சேரும் வரை கிளறிவிட்டு, மூடி வைத்து 2 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும். 2 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து கிளறி, இறாலை வாணலியில் ஒரு பக்கமாக கொண்டு வந்து, மறுபக்கத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து சிறிது கிளறி விட வேண்டும். முட்டை நன்கு வெந்து உதிர்ந்ததும், இறாலுடன் முட்டையை ஒன்று சேர நன்கு கிளறி ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியாக மிளகுத் தூளைத் தூவி கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான இறால் முட்டை மசாலா தயார்.

The post இறால் முட்டை மசாலா appeared first on Dinakaran.

Tags : Dinakaraan ,
× RELATED கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில்...