×

31 தொகுதிகளை கூட்டணிக்கு வழங்க திட்டம்; பாஜக 9 தொகுதிகளில் மட்டுமே போட்டி: அதிமுகவிடம் மீண்டும் ஆதரவு கேட்க முடிவு


சென்னை: தமிழகத்தில் கூட்டணி முறிந்துள்ள நிலையில் 9 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. மீதம் உள்ள 31 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக மீதம் உள்ள இடங்களில் அதிமுகவை ஆதரிக்கவும் திட்டமிட்டுள்ளது. பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளில் அதிமுகவின் ஆதரவை கேட்கவும் திட்டமிட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தொடர்ந்து அதிமுகவையும், அதன் தலைவர்களையும் விமர்சித்து வந்ததால், பாஜக கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அதிமுக அறிவித்து விட்டது. மேலும் பாஜக ஆதரவு நிலை எடுத்ததால், தமிழகத்தில் 18 சதவீதம் உள்ள சிறுபான்மையினரின் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, சிறுபான்மையினரை கூல் செய்யும் வேலைகளைத் தொடங்கியுள்ளது. முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் இதற்காக பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. இந்தநிலையில், கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்தது. சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமியை டெல்லிக்கு அழைத்த அமித்ஷா, பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக்கு 5 தொகுதிகள் வேண்டும். புதுவையில் நாங்கள் போட்டியிடுவோம். மீதம் உள்ள 24 தொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் என்று கூறினார். வழக்கமாக சீட்டுக்காக அதிமுக தலைமையிடம் பாஜக இரண்டாம் கட்ட தலைவர்கள் குறிப்பாக மத்திய அமைச்சர்கள் பேசுவார்கள்.

ஆனால் நேரடியாகவே அமித்ஷா, கட்டளையாக பிறப்பித்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் கூட்டணியில் இருந்து வெளியேறினால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும் என்று பயந்தவர், என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து வந்தார். இந்தநிலையில்தான் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்ததால், அதைக் காரணம் காட்டி வெளியேறி விட்டார். ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி நம்மை மீறி எதுவும் செய்ய மாட்டார் என்று பாஜக தலைமை கருதியுள்ளது. இதனால், சமீபத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், சென்னை வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 9 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடும்.

இதற்காக தென்சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், சிதம்பரம், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜகவும், தென்காசி(கிருஷ்ணசாமி), வேலூர்(ஏ.சி.சண்முகம்), பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சி(பாரிவேந்தர்), தேனி(ஓ.பன்னீர்செல்வம்), சிவகங்கை(டிடிவி தினகரன்) ஆகிய தொகுதிகளில் மட்டுமே தீவிரமாக செயல்பட்டால் போதும். மற்ற 24 தொகுதிகளில் பாஜக கூட்டணி போட்டியிடாது. இந்த தொகுதிகளில் அதிமுக போட்டியிடும். ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு வராவிட்டால், நாம் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். மற்ற 14 தொகுதிகளில் அவர்கள் வேட்பாளரை நிறுத்தாமல் இருந்தால் போதும் என்று பின்னர் பேசுவோம் என்று கூறியுள்ளார்.

தற்போது 5 மாநில தேர்தலில் மேலிடம் கவனம் செலுத்து வருகிறது. அந்த தேர்தல் முடிந்த பிறகு தமிழக பிரச்னைகளை கவனிக்கலாம். தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் பல தொகுதிகளில் டெபாசிட் காலியாகும். அந்த தொகுதிகளில் நமக்கு தேசிய அளவில் கெட்ட பெயர் வரும். அதனால் தேவையில்லாத விஷப்பரீட்சைக்கு தயாராக வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக குறித்து எந்த விமர்சனமும் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால்தான் கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர்களை அண்ணாமலை சந்திக்காமல் உள்ளார். ஆனாலும் பாஜகவின் கோரிக்கையை அதிமுக ஏற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

The post 31 தொகுதிகளை கூட்டணிக்கு வழங்க திட்டம்; பாஜக 9 தொகுதிகளில் மட்டுமே போட்டி: அதிமுகவிடம் மீண்டும் ஆதரவு கேட்க முடிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Bajaka ,Tamil Nadu ,Supreme Court ,Dinakaraan ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...