×

எந்த நேரத்திலும் வடக்கு காசா மீது மும்முனை தாக்குதலுக்கு இஸ்ரேல் தயார்: 48 மணி நேரத்தில் 10 லட்சம் பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்வு


* எகிப்தின் ஆதரவு கரத்துக்கு ஜோர்டன் நாடு கடும் எதிர்ப்பு
* இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட 4,100 பேர் பலி

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக எந்த நேரத்திலும் வடக்கு காசா மீது மும்முனை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு எகிப்து ஆதரவு அளித்ததற்கு ஜோர்டன் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7ம் தேதி இஸ்ரேலின் தெற்குபகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே இன்றுடன் 10வது நாளாக போர் நீடிக்கிறது.

இந்த போரில் பாலஸ்தீனம் தரப்பில் 2,670 பேரும், இஸ்ரேல் தரப்பில் 280 வீரர்கள் உட்பட 1,400 பேரும் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இதற்கிடையே வடக்கு காசா பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் தெற்கு காசா பகுதிக்கு இடம்பெயர இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. வடக்கு காசா பகுதியில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக, பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்காக விதிக்கப்பட்ட 24 மணி நேர கெடு முடிந்த நிலையில் கடந்த 48 மணி நேர இடைவெளியில் இதுவரை 10 லட்சம் பாலஸ்தீன மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இருந்தும், மக்கள் செல்லும்வழிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் மூடிவிட்டதால், லட்சக்கணக்கான மக்கள் வடக்கு காசா பகுதியில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கிடையே காசாவின் வடக்கு பகுதியில் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் டெல் அவிவ் நகரில் நடந்த அவசர அமைச்சரவை கூட்டத்தில், ‘இஸ்ரேல் மக்களை அழித்துவிடலாம் என்று ஹமாஸ் கனவு காண்கிறது. அதற்கு முன்பாக, ஹமாஸ் அமைப்பை நாம் முழுமையாக அழித்துவிடுவோம். இஸ்ரேலின் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஓரணியாக செயல்பட வேண்டும்’ என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் வடக்கு காசா பகுதியில் தரைவழி தாக்குதல் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறுகையில், ‘ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து அழிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும்’’ என்றார். பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்ததயாராகி வருகின்றன. இதற்காக காசா முனை எல்லை பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் தயார் நிலையில் உள்ளன. ராணுவ தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் தாக்குதல் தொடங்க உள்ளது.

இஸ்ரேல் ராணுவம், விமானப் படை, கடற்படை தயார் நிலையில் உள்ளன. வடக்கு காசாபகுதியில் ஒரே நேரத்தில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தும்போது, ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை குண்டு தாக்குதலை தீவிரப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. அதேநேரம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்தும், ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால், இஸ்ரேல் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் மும்முனை தாக்குதல் ஒருபக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களுக்காக தனது காசா எல்லைப் பகுதியைத் திறக்கப்போவதாக எகிப்து அறிவித்துள்ளது.

ஆனால் அதற்கு ஹெஸ்பொல்லா தீவிரவாத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடி வெளியிட்ட அறிக்கையில், ‘காசாவில் இருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களை எகிப்துக்கு அனுப்பி வைப்பது, எங்களது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களை இடம்பெயர செய்வதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. அனைத்து மக்களும் அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமையுடன் வாழ அனுமதிக்க வேண்டும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்.

பிணைக் கைதிகளை அழைத்து வர மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்’ என்று கூறினார். கடந்த 2 நாட்களாக காசாவின் வடக்கு பகுதியை மும்முனை தாக்குதல் நடத்த இஸ்ரேல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், இன்று காலை வரை அதுபோன்ற தாக்குதலை தொடரவில்லை. அரசு தரப்பில் அதிகாரபூர்வ உத்தரவுகள் வராததால், மும்முனை தாக்குதல் தாமதிக்கப்பட்டு வருவதாகவும், எந்தநேரமும் தாக்குதலுக்கு தயாராக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தும் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள 150க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை மீட்பதற்கான வியூகங்கள் தாமதமாகி வருவதால், மும்முனை தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தாமதப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து ஒரு தீவிரவாத நாடு!
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்தும், இஸ்ரேலுக்கு எதிராகவும் லண்டனின் ட்ரஃபல்கர் சதுக்கத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர். அவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் சிலர், சிவப்பு நிற ஆடை அணிந்திருந்த நிலையில், ‘இங்கிலாந்து ஒரு தீவிரவாத நாடு’ என்றும், அவர்கள் அணிந்திருந்த ஜாக்கெட்டின் பின்புறம் டேப் ஒட்டப்பட்ட படங்கள் இருந்தன. அந்த படங்களில் பாராகிளைடர்களில் பறப்பது (ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய முறை) போன்று உள்ளது. இவ்விவகாரம் குறித்து உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் வெளியிட்ட அறிவிப்பில், ‘போலீஸ் வருகிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள். சிலர் தீவிரவாதத்தை கவுரவப்படுத்துகிறார்கள். இனப்படுகொலையை ஊக்குவிக்கின்றனர். பெண்கள் உட்பட யூத மக்களின் கொலைகளை கேலி செய்யவும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் வருகிறது’ என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் வன்முறை, வெறுப்பை தூண்டும் விதமாக பேசிய சிலரை போலீசார் பிடித்து சென்றனர்.

ஜோ பிடன் இஸ்ரேல் பயணம்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்திட்டத்தை பரிசீலித்து வருவதாக மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘ஹமாஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிபர் ஜோ பிடன் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார். அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும், 2 பில்லியன் டாலர்கள் உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

பாலஸ்தீன தலைவர் சர்ச்சை
பாலஸ்தீனிய அரசின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அளித்த பேட்டியில், ‘ஹமாஸ் இஸ்லாமியக் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளானது, பாலஸ்தீன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இரு தரப்பிலும் சிக்கியுள்ள பொதுமக்கள், கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்றார். இந்த செய்தியை பாலஸ்தீன அரசு ஆதரவு ஊடகம் வெளியிட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த செய்தியை நீக்கியுள்ளது.

காசா மருத்துவமனைகளில் உயிர் அச்சம்
காசா வடக்கு பகுதியில் இருந்து மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். காசாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள், அங்கிருந்து வெளியேற முடியாத சூழலில் உள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் அந்த மருத்துவமனைகளுக்கு தேவையான எரிபொருள், மருந்து பொருட்கள், அடிப்படைப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாமலும், நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேலியப் படைகள் ஒருபக்கம், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஒருபக்கம், ஹமாஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஒருபக்கம் என்று பாலஸ்தீன மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘காசா பகுதியில் செயல்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் எரிபொருள் இருப்பு இன்னும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே இருக்கும். பேக்கப் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் அளவு குறைந்து வருவதால், ஆயிரக்கணக்கான நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

மனித கேடயமாகும் இஸ்ரேல் பிணைக்கைதிகள்
காசாவிலிருந்து பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் விதித்துள்ள கெடு நிறைவடைந்த நிலையில், மேலும் அவகாசம் அளிக்கப்பட்டு தாக்குதல் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதில் குறிப்பாக, பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் மனித கேடயங்களாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால் தரைவழித் தாக்குதலுக்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிணைக் கைதிகளை உயிருடன் மீட்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதற்கு தயக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.

அதேபோன்று, ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலத்தடி பதுங்கு குழிகளும் இஸ்ரேல்ராணுவத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த பதுங்கு குழிகளில் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, போர் தொடங்கும்பட்சத்தில் அதிக விலைகொடுக்க வேண்டியிருக்கும். இது, இஸ்ரேல் ராணுவத்தின் தார்மீக செயல்பாட்டுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்கு நிலவும் காலநிலையும் போர்ச்சூழலுக்கு தகுந்த வகையில் இல்லை. பனிமூட்டமான வானிலையால் இஸ்ரேல் விமானங்கள் இயக்கப்படுவதிலும், குறிப்பிட்டஇலக்குகளை தாக்கி அழிப்பதிலும் ராணுவம் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.

ஹமாஸ் தளபதி படுகொலை
காசாவை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து போரில் ஈடுபட்டால், அந்த போரில் ஈரான் இணையும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன், ஐக்கிய நாடுகள் சபைக்கு தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மோதலைத் தூண்டும் வகையில் உள்ளன’ என்றார். இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் ஹமாஸின் தேசியப் பாதுகாப்புப் பிரிவின் தெற்கு மாவட்டத் தளபதியான மாடெஸ் ஈத், இஸ்ரேல் வான்வெளிப் படையால் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘போர் விதிகளின்படி இஸ்ரேல் செயல்படும் என்று நம்பிக்கை எனக்குள்ளது. அமெரிக்க துருப்புக்களை இஸ்ரேலில் குவிக்க வேண்டிய அவசியமில்லை. ஹமாஸ் தீவிரவாத அமைப்பு முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதேநேரம் பாலஸ்தீனத்திற்கான முறையான அரசு இருக்க வேண்டும். மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மை காரணமாக அமெரிக்காவில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது’ என்று கூறினார்.

வெறுப்பால் 6 வயது சிறுவன் குத்திக் கொலை
அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த 71 வயதான முதியவர் ேஜாசப் ஹூஸ்பா என்பவர், பாலஸ்தீன – அமெரிக்க வாழ் 32 வயது தாயையும், அவரது 6 வயது மகனிடமும், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து பேசியுள்ளார். அப்போது அந்த முதியவர், ‘நீங்கள் (அவர்களின் மதத்தை குறிப்பிட்டு) சாக வேண்டும்’ என்று கூறினார். பின்னர் அந்த சிறுவனையும், அவரது தாயையும் கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் 26 முறை கத்தியால் குத்தப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவரது தாயும் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இதுதொடர்பாக அந்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வெறுப்பின் காரணமாக சிறுவனை கொன்ற சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.நா பொது செயலர் வேண்டுகோள்
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் அளித்த பேட்டியில், ‘ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். மத்திய கிழக்கு நாடுகள் ஆபத்தான நிலையில் உள்ளது. காசா மக்களுக்கு தேவையான தண்ணீர், மின்சாரம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. எகிப்து, ஜோர்டான், மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது’ என்றார்.

The post எந்த நேரத்திலும் வடக்கு காசா மீது மும்முனை தாக்குதலுக்கு இஸ்ரேல் தயார்: 48 மணி நேரத்தில் 10 லட்சம் பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்வு appeared first on Dinakaran.

Tags : Israel ,northern Gaza ,Palestinians ,Jordan ,Egypt ,Dinakaran ,
× RELATED ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு மழை: 9 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி