×

தமிழக மீனவர்கள் மீது விரோத போக்கு; இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: பிரதமர் மோடி, இலங்கை அதிபருடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து தமிழக மீனவர் காங்கிரஸ் சார்பில் இலங்கை தூதரகம் முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் விசைப்படகுகளில் பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க சென்ற போது நேற்று 27 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 இயந்திர படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச கடல் எல்லையை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்கள். இச்செய்தி கடலோர மாவட்ட மீனவர்களிடையே கடும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடற்பகுதியில் மீன்பிடிக்கச் செல்கிற தமிழக மீனவர்கள் இரவு நேரங்களில் சர்வதேச கடல் எல்லை எங்கே இருக்கிறது என்பதை சரியாக கணிக்க முடியாத காரணத்தால் தவறுதலாக எல்லையை தாண்டி செல்கிற நிலை ஏற்படுகிறது. இரு நாடுகளின் கடல் பகுதியில் எல்லைகளை வகுக்கலாமே தவிர, மீன்பிடிக்க செல்கிற மீனவர்களை எல்லையை தாண்டுவதாக காரணம் கூறி இலங்கை ராணுவம் கைது செய்வது மனிதாபிமானமற்றது. மிகமிக கொடூரமானது.

உடனடியாக பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக மீனவர்களிடம் திரும்ப ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள், கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் துன்பத்திற்கு ஆளாகி, வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை அரசின் தூதரக அலுவலகத்தின் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழக மீனவர்கள் மீது விரோத போக்கு; இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri Lankan government ,KS Alagiri ,Chennai ,Modi ,President of Sri Lanka ,Dinakaran ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...