×

போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள்

நியூயார்க்: காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து பலரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். எனவே பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், ‘போரில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குடிமக்கள் தாக்கப்படக் கூடாது என்பதை உறுதியாக வலியுறுத்துகிறேன்.

மனித உரிமைகள் சார்ந்த சட்டங்கள் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும். முக்கியமாக காசாவில் உள்ள குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள பிணைக் கைதிகளை அவர்கள் பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும். உலகின் எந்த மூலையிலும் அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தக் கூடாது. போர் என்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ரஃபா கிராசிங் திறப்பு
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் அளித்த பேட்டியில், ‘எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள காசா எல்லை மீண்டும் திறக்கப்படும். அதன் மூலம் உதவிகள் வழங்கப்படும். எகிப்து, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது. எகிப்தின் சினாய் தீபகற்பம் வழியாக உதவிகள் வழங்கப்படும். வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை ரஃபா கிராசிங் வழியாக வெளியேற்றுவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாவுடன் நியாயமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது’ என்றார்.

The post போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Pope Francis ,New York ,Hamas ,Israel ,Gaza ,Dinakaran ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு