×

சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

டெல்லி: சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்த வழக்கை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் என்பது குடிமக்கள் அல்லது கார்ப்பரேட் குழுக்கள் ஒரு வங்கியில் இருந்து வாங்கி ஒரு அரசியல் கட்சிக்கு கொடுக்கக்கூடிய பணவியல் கருவிகள் ஆகும், பின்னர் அவற்றை பணத்திற்காக மீட்டெடுக்க முடியும். இதனை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு 2018 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் திருத்தி இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

2017 நிதிச் சட்டம், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தேர்தல் நிதி வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்களை வெளியிடும் முறையை அறிமுகப்படுத்தியது. நதி மசோதாவாகத்த தாக்கல் செய்யப்பட்டதால், ராஜ்யசபாவின் ஒப்புதல் தேவையில்லாமலே சட்டமாக நிறைவேறியது. நிதிச் சட்டம், 2017 மூலம் அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற, தடையில்லா நன்கொடை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டன. இந்த நிதிச் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்ற முடியாது என்றும் மனுக்களில் கூறப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தைத் தடை செய்யக் கோரிய மனு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் மார்ச் 2021 இல் தள்ளுபடி செய்துவிட்டது. இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் சட்டம் வெளிப்படையானது என்று ஒன்றிய அரசு தனது பதில் பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது .

இந்த நிலையில், பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 145(4) பிரிவின்படி, இந்த விவகாரம் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் எனவும், அக்டோபர் 30-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

The post சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,DELHI ,Dinakaraan ,
× RELATED ஜாமினை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவால்...