×

அழிஞ்சிவாக்கம் அருகே கொசஸ்தலை ஆற்றின் புதிய மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை: வாகன ஓட்டிகள் அவதி, நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் குருவாயல் அழிஞ்சிவாக்கம் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்நிலையில் கடந்த காலங்களில் அழிஞ்சிவாக்கம், திருக்கண்டலம், பூரிவாக்கம், பெருமுடிவாக்கம், சேத்துப்பாக்கம், பாஷிகாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கனி மற்றும் பூக்களை செங்குன்றம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த கொசத்தலை ஆற்றினை கடந்துதான் சென்று வந்தனர்.

மழைக்காலங்களில் ஆற்றில், தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலை ஏற்பட்டால், இப்பகுதியில் உள்ள மக்கள் சுற்றி செல்லும் நிலை இருந்தது. இதற்கிடையே அழிஞ்சிவாக்கம் -குருவாயல் இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றின் மீது மேம்பாலம் கட்ட அப்பகுதி மக்கள் விவசாயிகள் நீண்ட நாளாக போராடி வந்த நிலையில், அரசு மேம்பாலம் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் செங்குன்றம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இம்மேம்பாலத்தை பயன்படுத்தி தான் சென்று வருகின்றனர்.

நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் பாலத்தின் மீது இருபுறமும் சுமார் 30க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால், கடந்த 3 மாதங்களாக மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால், மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதியில் விபத்து மற்றும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அழிஞ்சிவாக்கம் அருகே கொசஸ்தலை ஆற்றின் புதிய மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை: வாகன ஓட்டிகள் அவதி, நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kosasthalai river ,Achinchivakkam ,Periyapalayam ,Guruvayal Achinchivakkam ,Ellapuram Union ,Tiruvallur District ,Azhinchivakkam ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...