×

கேரளா, நீலகிரியில் 23 பேரை கொன்றது தெப்பக்காடு முகாமில் மக்னா யானை உயிரிழப்பு

ஊட்டி: கேரளா மற்றும் நீலகிரியில் 23 பேரை பலி கொண்ட மக்னா யானை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தது. முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த 1998ல் மக்னா ஆண் யானை குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து 21 பேரை கொன்றது.

அதனை சுட்டு கொல்ல கேரளா வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்குள் நுழைந்து, இருவரை கொன்றது. இதனை தொடர்ந்து, அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வாச்சுகொல்லி, புளியம்பாறை பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானைக்கு 3 கும்கி யானைகள் உதவியுடன் வன கால்நடை மருத்துவர் அசோகன் மயக்க ஊசி செலுத்தினார். அந்த கால கட்டத்தில் யானையை ஏற்றி வர லாரி உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையில் பிடிபட்ட மக்னா யானையின் கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கும்கிகள் உதவியுடன் 3 நாட்கள் பிடிபட்ட இடத்தில் இருந்து நடக்க வைத்து தெப்பக்காடு முகாமிற்கு அழைத்து வரப்பட்டது.

யானையின் உடலில் குண்டு காயங்கள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் இருந்தன. குறிப்பாக, கால்களில் எலும்புகள் தெரியும் அளவிற்கு ஆழமான காயங்கள் இருந்தன. அதன்பின், வன கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி யானையை கவனித்து சிகிச்சை அளித்து காப்பாற்றினார். இதனால், மிகவும் மூர்க்கமாக இருந்த யானை சாதுவாக மாறியது. இதையடுத்து மருத்துவரின் நினைவாக அந்த யானைக்கு மூர்த்தி என பெயரிடப்பட்டது. கும்கி ஆக மாறிய மூர்த்தி பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.

வயது முதிர்வின் காரணமாக கடந்த ஆண்டு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் கடந்த ஓராண்டாக யானைக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தது. கடந்த 25 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி யானைக்கு 60 வயது பூர்த்தியடைந்தது குறிப்பிடத்தக்கது. பிரேத பரிசோதனைக்கு பின் அதனை பராமரித்த பாகன் திருமாறன் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முதுமலை துணை இயக்குநர் வித்யா தலைமையில் வனத்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், முகாம் வளாகத்தில் அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

The post கேரளா, நீலகிரியில் 23 பேரை கொன்றது தெப்பக்காடு முகாமில் மக்னா யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Theppakkad Camp ,Nilgiris, Kerala ,Kerala ,Nilgiris ,Theppakadu ,Kerala, Nilgiris ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...